

ராமேசுவரம்: இலங்கை கடற்பகுதிக்குள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வரும் தமிழக மீனவர்களை கட்டுப்படுத்த, தமிழக முதல்வர் விஜய்க்கு யாழ்ப்பாணம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சம்மேளனத் தலைவர் செல்லதுரை நற்குணம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கச்சத்தீவு இலங்கையின் சொத்து. தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது கச்சத்தீவை இந்தியா மீட்க வேண்டும் என தெரிவித்து உள்ளீர்கள். இனிமேல் கச்சத்தீவு தொடர்பாக உண்மைக்கு புறம்பாகப் பேசுவதை நாங்கள் விரும்பவில்லை. நீங்கள் கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுக்க நினைப்பீர்களாயின், யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர்கள் அதற்கான எதிர்ப்பை காட்டுவதற்கு தயங்கமாட்டோம்.
தமிழகத்தில் இருந்து எல்லை தாண்டும் மீனவர்களால் இலங்கை வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எங்களது கடல் வளத்தை அழிப்பதோடு, எமது மீனவர்களின் வலைகளையும் நாசம் செய்கின்றனர்.
எனவே, இலங்கை கடற்பகுதிக்குள் எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை முதல்வர் விஜய் கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.