

சென்னை: மொழி உரிமைக்காக உயிர்த் தியாகம் செய்த இயக்கம் திமுக என்றும், இது ஒரு கட்சியின் அரசு அல்ல; இனத்தின் அரசு என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 2-வது நாளாக நேற்றும் அயலகத் தமிழர் தின விழா நடந்தது. இதற்கு தலைமை தாங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இலங்கையில் மாகாணங்களுக்கான அதிகாரப் பரவலாக்கத்தை இலங்கை அரசு உறுதிசெய்ய இந்திய அரசு அழுத்தம் தருமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். ‘உங்கள் கனவைச் சொல்லுங்கள்’ திட்டத்தில், புலம்பெயர்ந்த தமிழர்களும் பங்கேற்க வேண்டும்.
மொழி உரிமைக்காகத் தியாகம் செய்த இயக்கம்தான் திமுக. நமக்கு மொழிப்பற்று, இனப்பற்று உண்டு, ஆனால் மொழிவெறி, இனவெறி கிடையாது. நமக்குள் பிளவுகள் ஏற்பட அனுமதிக்காதீர்கள். கீழடி ஆய்வுகள் நாம் 4,000 ஆண்டுப் பழமையான வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் என்பதை உலகுக்கு உரக்கச் சொல்கிறது. அதனால்தான் இது ஒரு கட்சியின் அரசு அல்ல, ஒரு இனத்தின் அரசு. மொழி சிதைந்தால் இனம் சிதையும், இனம் சிதைந்தால் பண்பாடு சிதையும். பண்பாடு சிதைந்தால் நமது அடையாளமே காணாமல் போய்விடும். எனவே, எங்கு வாழ்ந்தாலும் ஒற்றுமையுடன் வாழுங்கள். தமிழகத்துக்கும் அடிக்கடி வாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் அயலகத் தமிழர்கள் பலருக்கு தமிழ் மாமணி மற்றும் கனியன் பூங்குன்றனார் விருதுகளை முதல்வர் வழங்கினார். வெளிநாடுகளில் கற்பிப்பதற்காக 10 தமிழ் ஆசிரியர்களை நியமித்து ஆணைகளை வழங்கினார். மாணவர்களுக்கு ஜெர்மன் மொழி பயிற்சி வழங்கி ஜெர்மனியில் வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் ஓஎம்சிஎல்லுடன் அழகப்பா பல்கலைக்கழகமும் விஐடி பல்கலைக்கழகமும் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்தன.
மேலும் பாரம்பரிய கலாச்சார சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அமெரிக்க தமிழர்கள் மற்றும் அசோக் லேலண்ட் நிறுவனம் இணைந்து, ரூ.1.89 கோடியில் வழங்கப்பட்ட இரட்டைத் தள மின்சார பேருந்து சேவையை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் மலேசிய துணை அமைச்சர் எம்.குலசேகரன், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த இசா எல்குராவ், இலங்கை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், மொரிசீயஸ் இணை அமைச்சர் ராஜன் நரசிங்கன், பினாங்கு மாநில சுற்றுச்சூழல் துறை நிர்வாகக்குழு உறுப்பினர் சுந்தரராஜு சோமு, கயானா முன்னாள் பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து, தமிழக அமைச்சர் சா.மு.நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.