

திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்
திருநெல்வேலி: “கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்ததாக அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி நாக்கில் நரம்பில்லாமல் பொய் பேசுகிறார்; தோல்வி பயத்தில் எல்லை மீறி பேசத் தொடங்கியுள்ளார்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக கூறினார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக பிரச்சார பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: “அதிமுகவை அமித் ஷாவுக்கு தாரை வார்த்துள்ள பழனிசாமி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசும்போது, எனக்கு உயிர் கொடுத்து என்னை ஆளாக்கிய முன்னாள் முதல்வர் கருணாநிதியை, நான் வீட்டுச் சிறையில் வைத்திருந்ததாக நாக்கில் நரம்பில்லாமல் பேசியிருக்கிறார். தோல்வி பயத்தில் எல்லை மீறி அவர் பேச தொடங்கியுள்ளார்.
முதல்வராக எனது செயல்பாடுகளை விமர்சிக்க எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் உங்களுக்கு உரிமை இருக்கிறது. தேர்தலில் மக்கள் அதை எடைபோட்டு பார்ப்பார்கள். ஆனால் கருணாநிதியை பற்றி பேசுவதற்கு உங்களுக்கு எந்த தகுதியும், யோக்கியதையும் கிடையாது. அவர் ஒரு சிங்கம். அவரை யாரும் சிறையில் வைக்க முடியாது. அவரது இதய சிறையில் நானும், இங்குள்ள அவரது உடன்பிறப்புகளும் இருந்தோம்.
தமிழகத்தில் 5 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நீண்டகாலம் முதல்வராக இருந்தவர். அண்ணாவின் அருகில் இருக்க வேண்டும் என்பதுதான் அவரது கடைசி ஆசை. அவர் இறந்தபோது, அப்பாவுக்காக அல்ல, தலைவனுக்காக உங்கள் வீட்டு படியேறி வந்து நின்றபோது, இரக்கமே இல்லாமல் இடம்தர மறுத்தவர்தானே நீங்கள். உங்களுக்கு முதல்வர் பதவி அளித்த சசிகலாவின் காலை வாரிவிட்டவர் நீங்கள். டிடிவி, ஓபிஎஸ்ஸின் முதுகில் குத்தியவர் நீங்கள். உங்களால் ஆட்சிக்கு வரவே முடியாது. திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.
மக்கள் தங்களை புறக்கணித்துவிட்டார்கள் என்பது தெரியாமல் பத்துதோல்வி பழனிசாமி, திமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறார். அவர் மீது 11-வது தோல்வி பழனிசாமி என்று ஸ்டிக்கர் ஒட்ட மக்கள் தயாராகிவிட்டனர். இந்த தேர்தலில் திமுகவின் ‘சூப்பர் ஸ்டார்’ தேர்தல் அறிக்கை என்று சின்னக்குழந்தையும் சொல்லும்.
தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. அதில் பல சிக்ஸர்கள் அடிப்பதை பார்த்திருப்பீர்கள். அதுபோல் தேர்தல் அறிக்கையிலும் சிக்ஸர் போன்று பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.