“ஆட்சிக்கு வரவே முடியாத பழனிசாமி ஏன் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்?” - முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

Updated on
2 min read

“ஆட்சிக்கு வரவே முடியாத பழனிசாமி ஏன் வாக்குறுதிகளை அள்ளி வீசி நேரத்தை வீணடிக்கிறார்?” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நேற்று வேளாண்மைக் கல்லூரி, சட்டக் கல்லூரி, மினி டைடல் பூங்கா உள்ளிட்ட ரூ.2,777.92 கோடி மதிப்பிலான 49 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து ரூ.13.35 கோடி மதிப்பிலான 28 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 15,453 பேருக்கு 205.06 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசியதாவது:

சிவகங்கை என்றாலே சிலிர்ப்பு தான். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் நாகரிகம் ஓங்கியிருந்ததற்கான கீழடி தடயங்கள் கிடைத்த மண். பலரின் வீரத்தால், தியாகத்தால் சிவந்த மண். இதை நினைக்கும்போது எனக்குள் தமிழ் வீரமும், உணர்ச்சியும் பொங்கி எழுகிறது. வேளாண்மைக் கல்லூரி, சட்டக் கல்லூரியை உரிய நேரத்தில் பயன்பாட்டு கொண்டு வந்துள்ளோம். ஆனால், மத்திய அரசு அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 11 ஆண்டுகள் ஆகிவிட்டது.

திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். இதில், ப.சிதம்பரம் என்ன கருத்து சொல்கிறார் என்பதை கூர்ந்து கவனிப்பேன். அனுபவம் வாய்ந்த அவரது பாராட்டை முக்கியமாகக் கருதுவேன். திராவிட மாடல் ஆட்சியில் சிவகங்கை மாவட்டத்தில் பயனடைந்தோரின் பட்டியலை பார்த்தபோது எனக்கே மலைப்பாக இருந்தது. ப.சிதம்பரம் பேசும்போது அடுத்த 3 மாதங்களில் என்னை சந்தித்து கோரிக்கை வைக்கப் போவதாகக் கூறினார். அடுத்தும் நமது திராவிட மாடல் ஆட்சி தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. தற்போது அடிக்கல் நாட்டிய திட்டங்களை மீண்டும் வந்து திறந்து வைப்பேன்.

தமிழகம் வளர்ந்திருக்கிறது என்பது நான் கூறும் கற்பனை புள்ளி விவரம் இல்லை. அனைத்தும் மத்திய அரசு சொன்ன புள்ளி விவரம் தான். தமிழக வளர்ச்சியை விமர்சிக்கிற ஆளுநர், இதுகுறித்து மத்திய அரசை கேள்வி கேட்க வேண்டும். தமிழகத்துக்கு வந்த பிரதமர் தேர்தலுக்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பேசியுள்ளார். சமீபத்தில் வெளியான மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழகத்தை மனம் திறந்து பாராட்டியுள்ளனர். புதிதாக தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேம்படுத்தி இருப்பதாகவும், உற்பத்தித்துறை வேலைவாய்ப்பில் தமிழக முதலிடம் என்றும் பாராட்டியுள்ளனர்.

பெண்களுக்கான வேலைவாய்ப்பை பெருக்கும் திட்டங்களை தமிழகம் தீட்டியிருக்கிறது. இது மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி என்று பெருமையாக சொல்லியுள்ளனர். ஆனால், தமிழகத்துக்கான தொழில் முதலீடுகள் வேறு மாநிலத்துக்கு சென்றுவிட்டது என்று ஆளுநர் கூறுகிறார். பொருளாதார அறிக்கையை பிரதமரும், ஆளுநரும் படிக்க வேண்டும். படிக்காமல் எந்த நிகழ்சிகளுக்கும் போய்விட வேண்டாம்.

கிராமப் பொருளாதாரத்தின் முதுகெலும்பான மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை மத்திய பாஜக அரசு காலி செய்துவிட்டு, வேறு பெயரில் திட்டத்தை கொண்டு வருகிறது. அவர்களுக்கு மகாத்மா காந்தியையும் பிடிக்காது; மக்கள் நன்றாக இருந்தாலும் பிடிக்காது. ‘தற்போதே 100 நாள் திட்டத்தில் 50 நாட்கள் கூட ஒழுங்காக வேலை வழங்குவது இல்லை. அப்புறம் எப்படி மேஜிக்காக 125 நாட்களாக உயரும். மத்திய அரசு 125 நாட்களுக்கு எந்தக் கேரன்டியும் கொடுக்கவில்லை. அது வெறும் மாயை தான். 125 நாட்களுக்கு பதிலாக 365 நாட்கள் வேலை என்று கூட புருடா விடலாமே?’ என்று ப.சிதம்பரமே கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நூறு நாள் திட்டத்தில் கடந்த ஆண்டு வரை தமிழகத்தில் 65 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன. ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வரை ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், புதிய திட்டத்தில் பாதி வருவதே சந்தேகம் தான். வேலை நாட்களையும் நாம் முடிவு செய்ய முடியாது; போதாக்குறைக்கு, 40 சதவீத நிதியை மாநில அரசு வழங்க வேண்டுமாம். இதன்மூலம் நம் மீது பெரிய தாக்குதலை தொடுத்துள்ளனர்.

மத்திய அரசு கிராமப்புற மக்களை மொத்தமாக கைகழுவி விடுகிறது. பழைய திட்டமே தொடர வேண்டுமென சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். மக்களின் குரலுக்கு மத்திய அரசு கட்டாயம் செவிசாய்க்க வேண்டும். இல்லையென்றால் 3 வேளாண் சட்டங்கள், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு போல மக்கள் துணையுடன், உங்கள் முடிவை வாபஸ் பெற வைப்போம்.

தமிழகத்துக்கு குரல் கொடுக்க முடியாத 10 தோல்வி பழனிசாமி, எங்களது திட்டங்களை காப்பி அடித்து புதிய வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார். அவர் ஆட்சிக்கு வரப் போவதில்லை. அப்புறம் ஏன் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்? ஏற்கெனவே அதிமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியிலோ, பழனிசாமியோ எப்போதுமே சொன்னதை செய்யமாட்டர்கள். ஆனால், திமுக சொன்னதை செய்யும்; செய்வதைத் தான் சொல்லும்.

அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால கோரிக்கையான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தினோம். அதை யாராலும் செய்யவே முடியாது என்று சொன்னார்கள். அதையும் 5 ஆண்டுகளுக்குள்ளே செய்து, மனமிருந்தால் மார்க்கமுண்டு என்று நிரூபித்திருக்கிறது திராவிட மாடல் ஆட்சி. ஆட்சிக்கு வந்தபோது 17 சதவீதமாக இருந்த அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படியை 58 சதவீதமாக உயர்த்தியுள்ளோம். இன்னும் பல கனவுத் திட்டங்கள் இருக்கிறது. அதை நிறைவேற்ற திராவிட மாடல் 2.0 ஆட்சியை மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

<div class="paragraphs"><p>முதல்வர் மு.க.ஸ்டாலின்</p></div>
டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய அணியி​லிருந்து பாட் கம்​மின்ஸ் வில​கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in