

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், ஏழுகிணறு, அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகில் ரூ.147 கோடி செலவில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட ‘முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். உடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர்.
சென்னை: வடசென்னை வளர்ச்சித்திட்டத்தின் கீழ், சிஎம்டிஏ சார்பில், ஏழு கிணறு பகுதியில ரூ.147 கோடியில் கட்டப்பட்ட 776 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக, மண்ணடி, முத்தியால்பேட்டை, ஏழுகிணறு, பிராட்வே பிரகாசம் சாலை, வால்டாக்ஸ் சாலை, ஜட்காபுரம், கல்யாணபுரம், வுட்வொர்ஃப் போன்ற இடங்களில் நீண்ட காலமாக சாலை ஓரங்களிலும், கால்வாய் ஓரங்களிலும் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், கடந்த 2024 டிச.4-ம் தேதி 776 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, முதல்வர் ஆய்வு செய்த நிலையில், குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, ரூ. 147 கோடி ரூபாய் செலவில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் தரைதளம் மற்றும் 9 தளங்களுடன் இரண்டு தொகுதிகளாக 3.26 லட்சம் சதுர அடி கட்டிடப் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்ட முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
144 புதிய குடியிருப்புகள்: பின்னர், அங்கன்வாடி மையம், நகர்ப்புற நலவாழ்வு மையம், நியாய விலைக் கடைகள், முதல்வர் படைப்பகம், நவீன நூலகம், உடற்பயிற்சிக் கூடம், திறந்தவெளி அரங்கம், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி ஆகியவற்றை பார்வையிட்டார். அதன்பின், பயனாளி களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளையும் வழங்கினார்.
இதையடுத்து, வால்டாக்ஸ் சாலை, தண்ணீர்தொட்டி தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வளாகத்தில், 700 அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளன.
இதன் அருகில் சிஎம்டிஏ சார்பில் ரூ.31 கோடியில் தரைதளம் மற்றும் 9 தளங்களுடன் கூடுதலாக 144 புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.