

புதுச்சேரியில் 30 தொகுதிகள் இருந்தாலும் இம்முறை பலரும் முதலில் உற்றுநோக்குவது தட்டாஞ்சாவடி தொகுதியைத்தான். முதல்வர் தொகுதி’ என்ற அந்தஸ்து நெடுங்காலம் இத்தொகுதிக்கு உண்டு. அதேநேரத்தில் புதுச்சேரியிலேயே எம்எல்ஏ அலுவலகம் இல்லாத ஒரு சில தொகுதிகளில் இதுவும் ஒன்று. கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற பிறகு ரங்கசாமி இந்த தொகுதிக்கு வந்தது என்னவோ மிகக்குறைவுதான். அதே நேரத்தில் தட்டாஞ்சாவடிக்கும் ரங்கசாமிக்கும் நீண்டகால பந்தம் உண்டு.
கடந்த 1990-ல் தட்டாஞ்சாவடியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரங்கசாமி தோல்வியடைந்தார். அதன்பின்னர் தனது ஆஸ்தான குரு அப்பா பைத்திய சுவாமியிடம் ஆசி பெற்றார். ‘தேர்தலில் வெற்றி பெறுவாய்’ என்று அவர் சொல்ல, அடுத்த ஓராண்டில் தேர்தல் வந்தது. அதையடுத்து தட்டாஞ்சாவடியில் 1991, 1996, 2001, 2006 தேர்தல்களில் ரங்கசாமி தொடர்ச்சியாக வென்றார். முதல்வராகவும் ஆனார்.
காங்கிரஸோடு ஏற்பட்ட பிணக்கால், 2011-ல் என்.ஆர்.காங்கிரஸ் என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். அதே 2011-ம் ஆண்டு கதிர்காமம், இந்திரா நகர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றார். பின்னர் இந்திரா நகர் தொகுதியை துறந்தார். 2016-ல் இந்திராநகரில் மட்டும் போட்டியிட்டு வென்றார். அப்போது அவரால் முதல்வராக முடியவில்லை. ‘‘இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் போதுதான் நீங்கள் முதல்வர் ஆகிறீர்கள்’’ என்று யாரோ சொல்ல, கடந்த 2021-ல் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ஏனாமில் தோற்றாலும், தட்டாஞ்சாவடியில் வென்றார்.
அதே நம்பிக்கையில் இந்த முறை மீண்டும் தட்டாஞ்சாவடியில் போட்டியிடுகிறார். கூடவே மங்கலத்திலும் போட்டியிடுகிறார். இரண்டு தொகுதி சென்டிமென்ட் ஒரு புறம்; தனது தட்டாஞ்சாவடி தொகுதி ராசி மறுபுறம் என திட்டமிட்டு களமிறங்கி இருக்கிறார் ரங்கசாமி. இதுவரை புதுச்சேரியிலேயே அதிக ஆண்டுகள் முதல்வராக இருந்த பெருமையும் இவருக்குண்டு.
இந்தத் தேர்தலில், புதுச்சேரிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவராக இருக்கும் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக, லட்சிய ஜனநாயகக் கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. இந்தச் சூழலில் தட்டாஞ்சாவடியில் ரங்கசாமியை எதிர்த்து முன்னாள் முதல்வரும் தற்போதைய மக்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். இவர் புதுச்சேரிக்கான காங்கிரஸ் மாநிலத் தலைவராகவும் உள்ளார்.
இந்நாள் முதல்வரும் முன்னாள் முதல்வரும் ஒரே தொகுதியில் மோதுவது புதுச்சேரி அரசியலில் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தரப்பில் களம் காணும் வைத்திலிங்கமும் புதுச்சேரியில் அனுபவம்மிக்க அரசியல்வாதி. நெட்டப்பாக்கம் தொகுதியில் கடந்த 1980-ல் முதன்முதலில் போட்டியிட்டு தோற்றார். அதன்பிறகு 1985, 1990, 1991, 1996, 2001, 2006 ஆகிய தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்றார்.
நெட்டப்பாக்கம் தனித் தொகுதியானதால் கடந்த 2011, 2016 தேர்தல்களில் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பின்னர் 2019, 2024-ல் மக்களவை உறுப்பினரானார். எனினும், இண்டியா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் காங்கிரஸுக்கு பணியாற்ற மாட்டோம் என வெளிப்படையாக தெரிவித்து விட்டன.
திமுக ‘சைலன்ட் மோடில்’ உள்ளது. இதனால், தனித்து தன் பலத்தை காட்ட வேண்டிய நிர்பந்தத்தில் வைத்திலிங்கம் உள்ளார். இதே தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட்டில் இருந்து பிரிந்து சென்ற சேது செல்வம், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைத்திருக்கும் நேயம் மக்கள் கழகத்தின் வேட்பாளர் விநாயகம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திக் குமாரி உள்ளிட்டோரும் தங்களின் பரப்புரையைத் தொடங்கியிருக்கின்றனர். மொத்தத்தில் மற்றத் தொகுதிகளைக் காட்டிலும் தட்டாஞ்சாவடி தொகுதியில் அனல் பறக்கிறது.