

சென்னை கலைவாணர் அரங்கத்தில் பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நேற்று நிறைவடைந்தது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வருகை தந்த பன்னாட்டு பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சென்னை: இந்திய மொழிகளில் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் ஆண்டுதோறும் செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழக அரசின் சார்பில் 4-வது சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா சென்னையில் கடந்த 16-ம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நமது மண்ணின் சிந்தனைகளும், எழுத்துகளும் உலகம் முழுவதும் பரவ வேண்டும். இலக்கியத்துக்கு எல்லைகள் கிடையாது. திருவள்ளுவரின் அறமும், இளங்கோ அடிகளின் காப்பியமும், பாரதியின் கவிதைகளும், பாரதிதாசனின் கருத்துகளும் உலகமெல்லாம் ஒலிக்க வேண்டும்.
அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கு மிகச் சிறந்த மாநிலம் தமிழகம். கீழடி முதல்பொருநை வரை கண்டெடுத்த தொல்லியல் சான்றுகள் மூலம் தமிழ்ச் சமூகத்தின் அறிவு மரபு எப்படிப்பட்டது என்பது புரியும். உலக நாடுகளின் சிறந்த படைப்புகளைத் தமிழில் கொண்டு வாருங்கள்.மனிதநேயம், சமூகநீதி பேசும் திராவிடக் கருத்தியல் இலக்கியங்களை உங்கள் நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இறுதி செய்யப்பட்ட நிலையில், மத்திய கலாச்சாரத் துறையின் தலையீட்டால், விருது அறிவிக்கும் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது. கலை இலக்கிய விருதுகளில்கூட அரசியல் குறுக்கீடுகள் செய்வது ஆபத்தானது. இப்படி ஒரு சூழலில், தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக எதிர்வினை ஆற்றவேண்டும் என்று பல்வேறு எழுத்தாளர்கள், கலை இலக்கிய அமைப்புகளைச் சார்ந்தோர் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். இது காலத்தின் தேவை என்று நாங்களும் உணர்ந்தே இருக்கிறோம்.
அதன்படி, குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும். முதல்கட்டமாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடிசா, வங்காளம், மராத்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ‘செம்மொழி இலக்கிய விருது’ வழங்கப்படும். விருதுடன், தலா ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.
படைப்புகளின் இலக்கியத் தரத்தையும், வெளிப்படையான தேர்வு முறையையும் உறுதி செய்யும் விதமாக புகழ்பெற்ற எழுத்தாளர்கள், விருதாளர்கள் அடங்கிய குழு ஒவ்வொரு மொழிக்கும் தனியே அமைக்கப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார். விழாவில், அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஸ், சென்னை மேயர் பிரியா,தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி, கவிஞர்கள் வைரமுத்து, மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர் இமயம், பள்ளிக்கல்வித் துறை செயலர் சந்திரமோகன், பொது நூலகத் துறை இயக்குநர் ஜெயந்தி, எஸ்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புத்தகத் திருவிழாவில் 84 நூல்கள் வெளியீடு: தமிழக அரசின் மொழிபெயர்ப்பு மானியம் மூலம் தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட 44 நூல்கள், பொது நூலகத் துறையின் 40 நூல்கள் என மொத்தம் 84 நூல்களை புத்தகத் திருவிழாவில் முதல்வர் ஸ்டாலின்வெளியிட்டார். உலகத்தரம் வாய்ந்த படைப்புகள் எளியதமிழில் கிராமத்து மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என தமிழ்நாடு மொழிபெயர்ப்பு முகமை மூலம் பல கோடி ரூபாயை ஒதுக்கி, கடந்த 3 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.