

சென்னை: சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் வாகனம் நிறுத்துவதில் போலீஸாருக்கு இடையே வாக்குவாதம் நடந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜேசிபி மூலம் அகற்றம்: பெசன்ட் நகர் பேருந்து நிலையம் அருகே சாஸ்திரி நகர் காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தின் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ரோகினி நேற்று காலை திடீரென காவல் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களை ஜேசிபி மூலம் அகற்றியுள்ளார். இதை பார்த்த மற்ற போலீஸார் மற்றும் வாகன உரிமையாளர்கள், ஆய்வாளர் ரோகினியிடம் கேட்டுள்ளனர்.
அப்போது அவர், ஒரு மாதமாக இங்கே வாகனத்தை நிறுத்த வேண்டாம் என கூறி வருகிறேன், யாரும் கேட்பதில்லை. இந்த காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான வாகனங்கள் மட்டுமே நிறுத்த வேண்டும். அதை தவிர, குற்றப்பிரிவு, போக்குவரத்து போலீஸாரின் வாகனங்கள் நிறுத்தக் கூடாது என கூறியுள்ளார்.
இதையடுத்து, மற்ற காவல் நிலைய அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ரோகினியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.