எழும்பூர் அருங்காட்சியகத்தில் சோழர் கால சிற்பங்கள் சேதம்: அதிமுக குற்றச்சாட்டு

ADMK Election Manifesto panel

அதிமுக தலைமை அலுவலகம்

Updated on
1 min read

சென்னை: ‘சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் புனரமைப்பு பணிகள் நடந்துவரும் நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் காலத்து சிற்பங்களை கட்டுமானப் பணி கழிவுகளுக்கு இடையே ஏதோ குப்பைகளை போடுவது போல வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது’ என அதிமுக தெரிவித்துள்ளது.

இது குறித்து அதிமுக ஐடி விங்க் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் புனரமைப்பு பணிகள் நடந்துவரும் நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் காலத்து சிற்பங்கள் பொய்க்கால் குதிரை அரசால் மிக மோசமாக கையாளப்பட்டு, சேதமடைந்து வருவதாக செய்திகள் வருகின்றன.

தமிழகத்தின் வரலாற்றுப் பெருமை எதுவுமே தெரியாமல், வெற்றுக் கவர்ச்சியில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் முதிர்ச்சியற்ற அரசு, தமிழரின் ஒப்பில்லா வரலாற்றின் அடையாளங்களாக விளங்கும் சிற்பங்களை கட்டுமானப் பணி கழிவுகளுக்கு இடையே ஏதோ குப்பைகளை போடுவது போல வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

தமிழரின் வரலாற்றை உலகறியச் செய்ய கீழடி அகழாய்வை மூன்று கட்டங்களாக நடத்தி அருங்காட்சியகம் அமைத்த பெருமைக்குரிய அரசு அதிமுக அரசு.

“தமிழ்நாட்டின் கோட்டைகள், வரலாற்றுச் சின்னங்கள் மீட்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்படும்” என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள இன்றைய ஆளுங்கட்சி, இருக்கின்ற வரலாற்றுச் சின்னங்களை முதலில் நாசப்படுத்தாமல் பாதுகாக்கட்டும். தொல்லியல் துறையும் இதில் உடனடியாக தலையிட்டு, வரலாற்றுப் பொக்கிஷங்களை பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்துகிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADMK Election Manifesto panel
“மக்களுக்கு விரோதமாக தவெக அரசு செயல்பட்டால் வீதியில் இறங்கி போராடுவோம்” - எம்.ஏ.பேபி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in