

சென்னை: சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச்செயலகத்தில், முதல்வர், அமைச்சர்கள் அலுவலகங்கள் உள்ளன. நாமக்கல் கவிஞர் மாளிகை 10 தள கட்டிடத்தில், 54 துறை செயலர்கள், பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த அலுவலகங்களில் சென்னை மட்டுமின்றி அருகில் உள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் காலை 10 மணிக்கு அலுவலகம் வந்து இரவு வரை பணியாற்றுகின்றனர். பல்வேறு துறைகளில் களப்பணியாளர் களும் உள்ளனர். இந்நிலையில், மனிதவள மேலாண்மைத்துறையில் நேற்று முதல்முறையாக, வருகைப்பதிவுக்காக பயோமெட்ரிக் மற்றும் முகம் கண்டு அறியும் தொடுதிரை இயந்திரம்நிறுவப்பட்டுள்ளது.
அந்த துறையின் அலுவலர்கள் வருகை இதன் மூலம் பதிவு செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து மற்ற துறைகளுக்கும் விரைவில் இதே முறை வருகைப்பதிவேடு திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறைக்கு தலைமைச்செயலக சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன் கூறும் போது, “மனிதவள மேலாண்மைத்துறை கடந்த 4 ஆண்டுகளில் ஒருமுறைகூட எங்களை அழைத்து ஆலோசிக்க வில்லை.
காலையில் வருகைப்பதிவு ஏற்றுக் கொள்ளக்கூடியது. மாலையில் கட்டாயம் என்று கூறுவதை ஏற்க இயலாது. இதுதொடர்பாக, முதல் வரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்’’ என்றார்.