மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முகூர்த்தக் கால் நடும் விழாவை தொடங்கிவைத்த அமைச்சர் பி.மூர்த்தி. உடன், மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் உள்ளிட்டோர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: ஜன. 17-ல் முதல்வர் தொடங்குகிறார்
மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை வரும் 17-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் பி.மூர்த்தி கூறினார்.
மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் வரும் 15, 16, 17-ம் தேதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. அலங்காநல்லூர், பாலமேடு போட்டிகளுக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அமைச்சர் பி.மூர்த்தி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு போட்டிகள் மிகச் சிறப்பாக நடத்தப்படும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை வரும் 17-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
டிராக்டர் பரிசு... பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை வரும் 16-ம் தேதி துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வுகளில் அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
வழக்கமாக சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது பாமக மற்றும் விவசாயிகள் கோரிக்கைகளின்படி டிராக்டர் கொடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். போட்டிகள் அனைத்தும் எந்தப் பிரச்சினையுமின்றி நடக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். முகூர்த்தக்கால் நடும் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், வெங்கடேசன் எம்எல்ஏ பங்கேற்றனர்.
