

மதுரை: திண்டுக்கல் அரசு விழாவில் பங்கேற்றுவிட்டு மதுரை விமான நிலையம் திரும்பும் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற காரின் டயர் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்லில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் விமானம் மூலம் மதுரை வந்தார். தனியார் ஓட்டலில் தங்கிய முதல்வர் நேற்று காலை கார் மூலம் திண்டுக்கல்லுக்குச் சென்றார்.
அரசு விழாவில் பங்கேற்றுவிட்டு மதியம் கார் மூலம் மதுரை விமான நிலையத்துக்குப் புறப்பட்டார். மதுரை தனக்கன்குளம் நான்கு வழிச்சாலையில் பகல் 12.50 மணிக்கு முதல்வர் சென்ற காரின் இடது முன்பக்க டயர் திடீரென வெடித்தது.
இதனால் கார் நிலை தடுமாறியபோதிலும் சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர், உடனே சாலையோரம் காரை நிறுத்தினார். பின்னால் பாதுகாப்புக்கு வந்த காவல் துறை அதிகாரிகள், கட்சியினரின் கார்களும் நிறுத்தப்பட்டன.
இச்சம்பவத்தில் முதல்வர் காயமின்றி தப்பினார். பின்னர் மற்றொரு கார் ஏற்பாடு செய்யப்பட்டு, முதல்வர் அதில் மதுரை விமான நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பின்னர் விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்.