

வைகோ
மதுரை: “குறுகிய நாட்களுக்குள் முதல்வர் விஜய் தன்னை ஆயத்தப்படுத்தி வருகிறார். ஆட்சியை நடத்தும் நிர்வாக நுணுக்கங்களை இன்னும் சில மாதங்களில் அவர் கற்று தேர்ந்து தெளிவு பெற்று விடுவார்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “குறுகிய நாட்களுக்குள் முதல்வர் விஜய் தன்னை ஆயத்தப்படுத்தி வருகிறார். இன்னும் ஆறு மாதங்களில் அவர் தன்னை முழுமையாக தயார் படுத்திக்கொள்வார். ஆட்சியை நடத்தும் நிர்வாக நுணுக்கங்களை இன்னும் சில மாதங்களில் அவர் கற்று தேர்ந்து தெளிவு பெற்று விடுவார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேசியது பற்றியும், முதல்வர் விஜய் பேசியது பற்றியும் கருத்து சொல்ல விரும்பவில்லை.
ஜூன் 27ல் கூடும் மதிமுகவின் பொதுக் குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். பயிர்க்கடன் குறித்து விவசாயிகளின் போராட்டத்துக்கு உரிய நடவடிக்கையை முதல்வர் எடுக்க வேண்டும்.
திமுக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக சொல்கிறார்கள், அமைச்சரவையில் இணைந்துவிட்டதாக சொல்கிறார்கள், ஆனால் திமுக கூட்டணியிலேயே இருப்பதாக சொல்கிறார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இது அபூர்வமான விஷயம். அதிமுக ஆட்சியமைக்க திமுக ஆதரவு கொடுக்க முனைந்தது உண்மையாக இருக்குமானால் அதனை விடவும் அரசியல் மோசடி இன்னொன்று இருக்க முடியாது.” என்றார்