“முதல்வர் விஜய் உடனடியாக வேங்கைவயல் செல்ல வேண்டும்” - வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்| கோப்புப் படம்

வானதி சீனிவாசன்| கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: ‘சமூக நீதியை நிலைநாட்டுவோம் என்று மேடைகளில் முழங்கினால் மட்டும் போதாது. அதை செயலில் காட்ட வேண்டும். முதல்வர் விஜய் உடனடியாக வேங்கைவயல் செல்ல வேண்டும்’ என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘நம் பெருமைமிகு தமிழ்நாட்டிற்கு பெரும் களங்கமாக அமைந்தது புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் நடந்த அவலம். பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில், அவர்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது, தமிழ்நாட்டையும் தாண்டி, ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிரச் செய்தது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் சுமார் இரண்டு ஆண்டுகள் இந்த வழக்கை விசாரித்த காவல்துறை, வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களே, அவர்கள் குடிக்கும் குடிநீரில் மனித மலத்தை கலந்தார்கள் என்று தீர்ப்பு எழுதியது.

தங்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும், தங்களது வலியை, வேதனையை உலகிற்கு உணர்த்தவும், வேங்கைவயல் மக்கள், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்தனர். ஆனால், மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறோம் என்று கூறி ஆட்சிக்கு வந்துள்ளவர்கள் இதைப் பற்றி கவலைப்படவில்லை.

முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். அவருக்கு உண்மையிலேயே பட்டியலின மக்கள் மீது அக்கறை இருக்குமானால், வேங்கைவயல் கிராமத்திற்கு நேரில் சென்று அங்கு நீதிக்காக போராடிவரும் பட்டியலின மக்களைச் சந்திக்க வேண்டும்.

குடிநீரில் மனித மலம் கலக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரித்து உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். சமூக நீதியை நிலைநாட்டுவோம் என்று மேடைகளில் முழங்கினால் மட்டும் போதாது. அதை செயலில் காட்ட வேண்டும். முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாக வேங்கைவயல் செல்லுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>வானதி சீனிவாசன்| கோப்புப் படம்</p></div>
“ரியாலிட்டி அறியாத ரீல்ஸ் அறுந்துபோன திமுக” - உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதிலடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in