

சென்னை: தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவனின் இல்லத்துக்கு வந்த முதல்வர் விஜய், அங்கு அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார். முதல்வர் விஜய்யை வாசலுக்கே வந்து வரவேற்ற திருமாவளவன், அவருக்கு பூங்கொத்து அளித்தார். அதன் பின்னர் முதல்வர் விஜய்யும் திருமாவளவனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார். பின்னர் இருவரும் சிறிது நேரம் உரையாடினார்கள். அதன்பின்னர் திருமாவளவன் அரசியமைப்பின் முகப்புரையை முதல்வர் விஜய்க்கு வழங்கினார்.
முன்னதாக, மண்ணடியில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் அலுவலகத்திற்கு வந்த முதல்வர் விஜய் கட்சியின் தலைவர் காதர் மொய்தீனை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது ஐயூஎம்எல் தலைவர்களும் உடனிருந்தனர்.
அதேபோல அதிமுகவில் தனி அணியாக செயல்படும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அலுவலகத்துக்கு இன்று வந்த முதல்வர் விஜய், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், இரா.காமராஜ் மற்றும் அதிமுக எம்எல்ஏக்களை சந்தித்துப் பேசினார்.