

புது டெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை டெல்லியில் இன்று தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் சந்தித்தார்.
தமிழக முதல்வராக கடந்த மே 10-ம் தேதி பதவியேற்ற விஜய், மே 27-ம் தேதி முதல் முறையாக டெல்லி சென்று பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்தார்.
இந்நிலையில், 2-வது முறையாக 3 நாள் பயணமாக முதல்வர் விஜய் இன்று டெல்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வர்களுடனான நிதி ஆயோக் கூட்டம், டெல்லியில் நாளை (ஜூன் 11) நடைபெறுகிறது. அதில், முதல்வர் விஜய் பங்கேற்கிறார்.
இந்தச் சூழலில், டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை தமிழக முதல்வர் விஜய் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனையும் முதல்வர் விஜய் சந்தித்தார்.
கடந்த முறை டெல்லி சென்ற முதல்வர் விஜய், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ராகுல் காந்தி வேறு பணியில் இருந்ததால் சந்திக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை முதல்வர் விஜய் சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் தவெக அரசுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து, அமைச்சரவையில் பங்கேற்றுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.