

கோப்புப் படம்
சென்னை: உலக மீனவர்கள் தினத்தை முன்னிட்டு, முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, முதல்வர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில், “கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பையும், இயற்கையின் சவால்களையும் எதிர்கொண்டு, தங்கள் உயிரையும், உடைமையையும் பணயம் வைத்து உழைக்கும் மீனவப் பெருமக்களுக்கு உலக மீனவர் தினத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களின் கடின உழைப்பால் நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி வரும் மீனவப் பெருமக்களின் அர்ப்பணிப்பு மகத்தானது. மீனவச் சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்வது நம் அனைவரின் கடமையாகும். மீனவப் பெருமக்களின் நலன்களை பேணிப் பாதுகாப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: “மீனவச் சொந்தங்கள் அனைவருக்கும் கடலளவு அன்போடு உலக மீனவர்கள் தின வாழ்த்துகள். தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும் நெய்தல் நில நாயகர்களான மீனவ மக்களுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு.
அத்தகைய மீனவ மக்களுக்காக நமது திராவிட மாடல் ஆட்சியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, புதிய மீன்பிடித் துறைமுகங்கள், தூண்டில் வளைவுகள், எரிபொருள் மானியம் என எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினோம்.
ஆனால், தற்போதைய தவெக அரசோ ஜோதிடரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு பட்டினப்பாக்கத்தில்தான் தலைமைச் செயலகம் கட்டுவோம் என மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கிறது. திரையில் மீனவராக நடித்து ஏமாற்றிய முதலமைச்சருக்கு மீனவர்களின் உண்மையான போராட்டக் குணம் பற்றித் தெரியவில்லை.
மீனவர்களின் பாதுகாப்பு, பாரம்பரிய மீன்பிடி உரிமை, மீனவக் குடும்பங்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்காகத் திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும். அவர்களின் போராட்டத்தில் உடன் நிற்கும்.
அலைகளோடு போராடி, தமது உயிரைப் பணயம் வைத்து உணவளிக்கும் மீனவ மக்களின் துணிவையும் உழைப்பையும் போற்றுவோம்.” எனப் பதிவிட்டுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: “இயற்கை தரும் பெரும் சவால்களை எதிர்கொண்டு, தங்களின் கடின உழைப்பால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், உணவுப் பாதுகாப்பிற்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்கி வரும் மீனவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த உலக மீனவர்கள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடலையும் கரையையும் மட்டுமே நம்பியிருக்கும் மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும் எந்தவொரு திட்டங்களையும் செயல்படுத்தாமல், அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படவும், உரிமைகள் உறுதி செய்யப்படவும், கடலில் பாதுகாப்பான மீன்பிடிச் சூழல் உருவாகவும், மீனவ சமுதாயக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.” எனப் பதிவிட்டுள்ளார்.