சென்னை: சென்னையில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற பெயரில் தமிழக சாதனை பெண்களின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சி சென்னையில் 12-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் 2-வது கட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு பெண்களுக்காக செயல்படுத்தும் முன்னோடித் திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த மகளிரின் அனுபவங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கியப் பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்துக்காக மேற்கொண்டுள்ள அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் சாதனை பெண்களின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சி வருகிற 12-ம் தேதி (வெள்ளி) பிற்பகல் 3 மணிக்கு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில், சமூகசேவகியும் பத்மபூஷன் விருது பெற்றவருமான கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், பூப்பந்து போட்டி இந்திய வீராங்கனை துளசிமதி முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
இவ்விழாவில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கத்தையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
மேலும் நன்னிலம், மகளிர் நிலவுடைமைத் திட்டம், விடியல் பயணம், மக்களைத் தேடி மருத்துவம், சுயஉதவிக் குழுக்கள், விளையாட்டு, வெற்றி நிச்சயம், நலம் காக்கும் ஸ்டாலின், பெண் தொழில் முனைவோர், தோழி விடுதிகள் போன்ற திட்டங்களினால் பயன்பெற்ற மற்றும் சாதனை பெண்களின் வெற்றிக் கதைகளை வெளிக்கொணரும் நிகழ்வாக இந்த ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இவ்விழாவில் சாதனை பெண்கள், முக்கிய பெண் பிரபலங்கள், அமைச்சர்கள், எம்.பி.-க்கள். எம்எல்-ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள், கல்வி, சுயதொழில், மருத்துவம், காவல், விவசாயம், அறிவியல் தொழில்நுட்பம், நிர்வாகம், தொழில் உற்பத்தி, அரசியல், கலை, விளையாட்டு ஆகியவற்றில் சாதனை படைத்தவர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது