என்டிஏ ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும் தயங்காது: திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

Updated on
3 min read

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், திருவாரூரில் நேற்று தனது தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கினார். அங்கு பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு இரவு திருச்சி கோர்ட் யார்ட் நட்சத்திர விடுதியில் ஓய்வெடுத்தார்.

தொடர்ந்து, இன்று காலை, திருச்சி கிழக்குத் தொகுதியில் வாக்கிங் சென்றபடி திமுக சார்பில் போட்டியிடும் இனிகோ இருதயராஜ்க்கு ஆதரவாக வாக்கு கேட்டார். இத்தொகுதியில் தவெக தலைவர் சி.ஜோஸப் விஜய் போட்டியிடுகிறார். நாளை விஜய் இத்தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

பின்னர் ஸ்டாலின் நட்சத்திர விடுதிக்கு சென்று காலை உணவு முடித்துக் கொண்டு, தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்.

அங்கு திமுக வேட்பாளர்கள் திருச்சி மேற்கு கே.என்.நேரு, திருவெறும்பூர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு இனிகோ இருதயராஜ், மண்ணச்சநல்லூர் சீ.கதிரவன், ஸ்ரீரங்கம் துரைராஜ், முசிறி கருணை ராஜா, லால்குடி பாரிவள்ளல், மமக ப.அப்துல்சமது ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்திலும், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறையூர் (தனி) தொகுதிக்கு கை சின்னத்திலும் வாக்களிக்குமாறு கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கி, திருச்சிக்கு வந்திருக்கிறேன். கடந்த முறை திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் திமுகவுக்கு வெற்றியை தந்தீர்கள். அந்த வெற்றியால், சிறந்த 2 அமைச்சர்களைத் தமிழகத்துக்கு தந்தீர்கள். இந்த முறையும் திருச்சியில் முழு வெற்றி. தலைநகர் சென்னைக்கே சவால் விடும் வகையில் திருச்சி இன்றைக்குத் தரம் உயர்ந்து வருகிறது. 5 ஆண்டுகளில் திருச்சிக்காக ரூ.26 ,066 கோடி மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சாதிக் கலவரம் இல்லை. பாஜக ஆளும் மாநிலங்களான உ.பி., மணிப்பூர் ஆகியவற்றில் உள்ளதுபோல மதக் கலவரங்கள், கும்பல், தொடர் வன்முறைகள் இல்லை. கலவரம் உருவாக்க வேண்டும் என்று பாஜக செய்த சூழ்ச்சிகளையும் முறியடித்திருக்கிறோம்.

திமுக தேர்தல் அறிக்கையில், இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன் வழங்கும் சூப்பர் டூப்பர் வாக்குறுதியை பற்றித்தான் ஒரே பேச்சாக உள்ளது. நம்முடைய பெண்கள் ஒரு சேலை வாங்கினால் கூட, அவர்களுக்குப் பிடித்த கடையில், பிடித்த டிசைனில், கலரில் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதை மனதில் வைத்துதான் இந்த திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்.

இல்லத்தரசி திட்டத்தில் எல்லாமே ‘உங்கள் சாய்ஸ்’தான். அனைத்து தொகுதிகளிலும் முதல்வர் படைப்பகங்கள் அமைக்கப்படும். இல்லத்தரசிகள் திட்டத்தைப் ஊழலுக்கான திட்டம் என சம்பந்திக்கு காண்ட்ராக்ட் கொடுப்பதற்காகவே ஆட்சியை நடத்திய பழனிசாமி கூறுகிறார்.

திமுகவின் திட்டம் ஒவ்வொன்றும் தராமானது என்பதற்கு உதாரணம் கலைஞர் டிவி. 20 ஆண்டுகளாகியும் இன்றும் பல வீடுகளில் கலர் டிவியாக மட்டுமல்ல, கலைஞர் டிவியாக அது நிலைத்து நிற்கிறது. அதிமுக ஆட்சியில் வழங்கிய மிக்சி, கிரைண்டர், மின்விசிறி காயலாங்கடையில் இருக்கிறது. மக்களுக்கு நல்லது நடக்கக் கூடாது என்று, வயிற்றெரிச்சலில், தன்னை போலவே பிறரையும் நினைத்து ஊழல் நடக்கும் என்று பேசுகிறார்.

மதுரை பாஜக ஆதரவு கூட்டத்தின் நுழைவு வாயிலில் தந்தை பெரியார் படத்தை வைக்கக் கூடாது என்று பாஜக சொன்னதும், சுயமரியாதையே இல்லாமல் அதை எடுக்கத் துணிந்தவர்தான் பழனிசாமி. அதில் பெரியாரையும், அண்ணாவையும் கொச்சைப்படுத்தும் காணொலியை வெளியிட்டார்கள். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 3 பேர் கொஞ்சம் கூட சொரணையே இல்லாமல் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்தால் அண்ணாவை அசிங்கப்படுத்தினால் பார்த்துக்கொண்டு சும்மா இருந்திருப்பார்களா? பழனிசாமியின் ஒரே சாதனை அதிமுக எனும் கட்சியை அடிமைக் கூட்டமாக சீரழித்து இருப்பதுதான். 'திராவிடம்' என்ற சொல்லும் அந்தக் கூட்டத்தில் அவமானப்படுத்தப்பட்டது. திராவிடம் பற்றி படித்ததில் என்றார். யார் எக்கேடு கெட்டாலும் தன்னுடைய பதவியை காப்பாற்றிக் கொள்ள பாஜகவின் பாதம் தாங்கியாக பழனிசாமி உள்ளார்.

சிறுபான்மையினர், இலங்கைத் தமிழர்களுக்கும் துரோகம் இழைக்கும் வகையில் குடியுரிமைத் திருத்தச் (சிஏஏ) சட்டத்தை ஆதரித்து அது நிறைவேற துணைபோன கட்சிதான் அதிமுக. இவர்களுடன் சேர்ந்து 'பாட்டாளி' அன்புமணி ராமதாசும் ஆதரவாக வாக்களித்து துரோகம் செய்தார். இவர்களால்தான் சிறுபான்மையினருக்கு எதிரான சிஏஏ சட்டமே நிறைவேறியது. அதைத் தொடர்ந்து நடந்த போராட்டங்களில் 70 பேர் கொல்லப்பட்டார்கள்.

இவர்களின் ரத்தக்கறை இன்றைக்கு அதிமுக கையில் இருக்கிறது. ‘சிஏஏ சட்டத்தால் எந்த முஸ்லீம் பாதிக்கப்பட்டார் என்று காட்டுங்கள்’ என்றவர் தான் பழனிசாமி.

சிறுபான்மையினர் வாக்குகளுக்காக 2024 தேர்தலில் தனியாக நின்று நாடகம் ஆடி, சிஏஏ சட்டத்தை கண்டிப்பதாக பல்டி அடித்தார். ‘பாஜக மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள், சிஏஏ சட்டம் ஒரு வரலாற்றுப் பிழை’ என்று பிளேட்டை திருப்பிப் போட்டார். நான் இப்போது கேட்கிறேன், பழனிசாமி, இப்போது அந்தச் சட்டத்தை ஆதரிக்கிறாரா?எதிர்க்கிறாரா? என வெளிப்படையா சொல்ல வேண்டும்.

பாஜக கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ஆதரித்தார். அந்த சட்டத்தை எதிர்த்து போராடிய 8 மாநில விவசாயிகளை, ‘புரோக்கர்கள்’ என்று கொச்சைப்படுத்தினார். இப்படி, பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து, முழு சந்திரமுகியாகவே மாறிவிட்டார். அதாவது, முழு சங்கியாகவே மாறிவிட்டார்.

அதிமுக கூட்டணியில் பிரச்சினை இல்லை என்று கூறும் பழனிசாமி எதற்காக பலமுறை டெல்லிக்குச் சென்றார்? கூட்டணிக்குத் தலைமை அதிமுகதான் என்று சொல்கிறார்கள். ஆனால், அனைத்து கட்சிகளும் ஏன் பாஜகவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்? இது எப்படி தெரியுமா இருக்கிறது? ‘மாப்பிள்ளை அவர்தான். ஆனால், அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது’ என்று படையப்பா படத்தில் வரும் காமெடி போன்று இருக்கிறது.

நான் தெரியாமல்தான் கேட்கிறேன், கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என்றால், அதில் இருக்கும் சிறிய கட்சிகள் ஏன் அதிமுக சின்னத்தில் போட்டியிடாமல், பாஜகவின் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்? பழனிசாமியை முதலமைச்சர் ஆக்குவோம் என்று பிரதமர் மோடி சொல்லவில்லை. என்டிஏ சர்க்கார், என்டிஏ சர்க்கார் என்றுதான் சொல்கிறார். ஆனால், தமிழ்நாடு வெர்சஸ் என்டி, தமிழ்நாடு வெர்சஸ் டெல்லி என்று நாம் சொன்னால், ‘இது என்ன டெல்லி தேர்தலா?’ என கேட்கிறார் பழனிசாமி.

தன் மீதான ஊழல் புகார்கள், உறவினர்கள் வீடுகளில் நடந்த ரெய்டுகளில் இருந்து தப்பிக்க மொத்தக் கட்சியையும் பாஜகவிடம் பழனிசாமி அடகு வைத்துவிட்டார். எம்எல்க்களை ஏலத்தில் எடுத்து ஒரு முறை முதல்வராகிவிட்டார். மீண்டும் இவரிடம் ஆட்சி சென்றால் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் மொத்தமாக விற்றுவிடுவார்.

இவரின் ஓனரான பாஜகவின் ஒரே நோக்கம் தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பதுதான். நேராக வந்தால் தமிழக மக்கள் நோட்டாவிற்கு கீழே அனுப்பிவிடுவார்கள். அதனால் அதிமுக முகமூடியுடன் வருகிறார்கள்.

பாஜக 12 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தாலும், தமிழகத்துக்கு ஒரு சிறப்புத் திட்டம் கூட இல்லை. ஆனால் தேர்தல் வந்துவிட்டது என்று, தமிழ்நாட்டிற்குக் கிளம்பி வருகிறார் பிரதமர் மோடி. கடந்த மாதம் திருச்சிக்கு வந்த மோடி, மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு செய்த திட்டங்கள் பற்றி எதுவும் சொன்னாரா? இருந்தால்தானே சொல்ல முடியும். இதில், திமுக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டுச் செல்கிறார்.

பிரதமர் மோடி தமிழத்தில் ஒருவாரம் தங்கியிருந்து, தலைசிறந்த தமிழ்நாடாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் முன்னேற்றமும் வளர்ச்சியும் தொடர வேண்டும் என்றால், 7வது முறையும் திமுக ஆட்சி அமைய வேண்டும், பாஜகவும் அதன் கொத்தடிமைக் கூட்டமும் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால், உத்தரபிரதேசம், மணிப்பூர் போன்று வன்முறைக் காடாக ஆகிவிடும். இவர்கள் வந்தால் தமிழ்நாட்டின் பெயரையே தட்சிண பிரதேஷ் என்று மாற்றவும் தயங்க மாட்டார்கள்.

இதைத் தடுக்க வேண்டும் என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் பாஜக - அதிமுக கூட்டணிக்கு எதிராக, ஓரணியில் இணைய வேண்டும். நம்முடைய எதிரிகளையும், பாஜகவின் உதிரிகளையும் வீழ்த்த வேண்டும். நாம் போராடுவது, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றிக்காக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக. பாஜகவின் டப்பா இன்ஜின் முன்னால், நம்முடைய திராவிட மாடலின் சூப்பர் ஃபாஸ்ட் எஞ்சின் ஒருபோதும் தலைகுனியாது. நம்முடைய ஸ்பீடு என்ன என்று காண்பிப்போம்.

இந்த ஜனநாயகப் போரில், அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டைக் காக்க, அனைவரும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in