

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 57-வது நினைவு நாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோர்.
சென்னை: முன்னாள் முதல்வர் அண்ணாவின் 57-வது நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று மலர் தூவி அஞ்சலி செலுத் தினர்.
திமுக நிறுவனரான மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 57-வது நினைவு தினம் தமிழகம் முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திமுக சார்பில் அதன் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
சென்னை வாலாஜா சாலை சந்திப்பு முதல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் வரை 2 கிமீ தூரத்துக்கு பேரணி நடைபெற்றது. இதில் திமுகவின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
அதன்பின் அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திமுக சார்பில் வீரவணக்க முழக்கங்கள் எழுப்பி தொண்டர்களும் தங்கள் அஞ்சலியை செலுத்தினர். தொடர்ந்து அருகே உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திலும் மலர்வளையம் வைத்து முதல்வர் மரியாதை செலுத்தினார்.
அண்ணா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். முன்னாள் அமைச்சர்கள், கட்சி மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.
பேரணியையொட்டி வாலாஜா சாலை முதல் மெரினா காமராஜர் சாலை வரை போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “பேரறிஞர் அண்ணா, தமிழர்களின் மனசாட்சி. நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு.
மொழித் திணிப்பு, பண்பாட்டு திணிப்பு, நிதி நெருக்கடி என வஞ்சகங்களைச் செய்துகொண்டு, துரோகிகளை எல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும், பாஜக அரசின் ஆதிக்கத்துக்கு அண்ணாவின் தமிழகத்தில் இடமில்லை. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், தமிழகத்தை அண்ணாதான் ஆள்கிறார்” என்று பதிவிட்டிருந்தார்.
இதேபோல் அதிமுக சார்பில் அதன் பொதுச்செயலாளர் பழனிசாமி, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் வந்து அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் தனது எக்ஸ் தளத்தில், “என்றும் மக்களுக்கான திராவிட வழி அரசியலின் துருவ நட்சத்திரமாக விளங்கும் நமது அண்ணாவின் நினைவு நாள் இன்று.
அன்றைய கொடுங்கோல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த, மக்களுக்கான கூட்டணி அமைத்து அண்ணா கண்ட அந்த வெற்றிதான், தமிழகத்தின் அரசியலை அடுத்த நூற்றாண்டுக்கு கட்டமைத்தது. தமிழகத்தை தீயசக்தியின் கோரப் பிடியில் இருந்து மீட்க வேண்டியது அவர் பெயர் தாங்கிய நமது அதிமுக இயக்கத்தின் வரலாற்றுக் கடமையாகும்.
மக்கள் துணையோடு திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். அண்ணாயிசம் போற்றும் அதிமுக நல்லாட்சியை மீண்டும் நிறுவுவதே நாம் அவருக்கு செலுத்தும் புகழஞ்சலியாகும்” என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோல், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். தேமுதிக சார்பில் கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அண்ணா படத்துக்கு பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.