

சென்னை: தமிழ்நாடு இணையம் சார்ந்த ‘கிக்’ (Gig) தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 100 தொழிலாளர்களுக்கு மானிய விலையில் இ-ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு இணையம் சார்ந்த ‘கிக்’ தொழிலாளர்கள் நல வாரியம் 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வாரியத்தில் 23,687 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்தத் தொழிலாளர்கள் ஓய்வு எடுக்கவும், செல்போனுக்கு சார்ஜ் செய்வதற்கும், கழிப்பறை வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட ஓய்வுக்கூடங்கள் சென்னை, கோயம்புத்தூர் நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான குழு காப்பீட்டுத் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
மேலும், ‘கிக்’ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 2 ஆயிரம் தொழிலாளர்களுக்கு புதிய ‘இ-ஸ்கூட்டர்’ வாங்கும் செலவினத்தில் ரூ.20 ஆயிரம் மானியமாக வழங்கும் புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு இணையம் சார்ந்த ‘கிக்’ தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற 100 தொழிலாளர்களுக்கு புதிய இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், அமைச்சர் சி.வி.கணேசன், தலைமைச்செயலர் நா.முருகானந்தம், தொழிலாளர் நலத்துறை செயலர் கோ.வீரராக வராவ், தொழிலாளர் ஆணையர் சி.அ.ராமன், உடலுழைப்பு தொழிலாளர் நலவாரிய செயலாளர் திவ்யநாதன், தொழிலாளர் கூடுதல் ஆணையர் எ.யாஸ்மின்பேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.