

சென்னை: மாமல்லபுரம் அருகில் ரூ.342.60 கோடியில் அமைய உள்ள மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், முட்டுக்காட்டில் கலைஞர் பன்னாட்டு அரங்கப்பணிகளை பார்வையிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் நீர்வளத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்டத்தின் திருப்போரூர் மற்றும் திருக்கழுகுன்றம் வட்டங்களில் பழைய மாமல்லபுரம் சாலைக்கும் கிழக்கு கடற்கரை சாலைக்கும் இடையில் கோவளம் உபவடிநிலப் பகுதியில் 5,161 ஏக்கர் பரப்பளவில் ரூ.342.60 கோடி மதிப்பில் புதிய குடிநீர் தேக்கத்துக்கு `மாமல்லன்' என்று பெயர் சூட்டி, நீர்த்தேக்கம் அமைக்கும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, மாநிலம் முழுவதும் நீர்நிலைகளை புனரமைத்து பாதுகாத்து சிறப்பான முறையில் செயலாற்றிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு சிறந்த நீர் பாதுகாத்தல் விருதுகளை (Best Water Conservation Award) வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:
தினசரி 170 மில்லியன் லிட்டர்: சென்னையின் வளர்ந்து வரும் பகுதிகளுக்காக அரசு செய்த முக்கியமான பணியாக வரலாற்றில், இந்த நிகழ்வு நினைவுகூரப்படும். இந்த நீர்த்தேக்கம் ரூ.342.60 கோடியில், மானாமதி குழும 69 ஏரிகளில் இருந்து வரும் உபரி நீர் கடலில் கலக்காமல் இருக்க அமைக்கப்படுகிறது.
திருவிடந்தை முதல் கோகிலமேடு வரை 5,161 ஏக்கரில், 1.65 டிஎம்சி கொள்ளளவில், 34 கிமீ நீளமுள்ள கரை மற்றும் நீர் ஒழுங்கியத்துடன் அமைக்கப்படுகிறது. இதன்மூலம் தினசரி 170 மில்லியன் லிட்டர் குடிநீரை சோழிங்க நல்லூர், மேடவாக்கம், பள்ளிக்கரணை, சிறுசேரி, கேளம்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 13 லட்சம் மக்களுக்கு வழங்க முடியும்.
பல்லவர்களில், ‘மாமல்லன்’ என்று போற்றப்படுகின்ற முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் உருவாக்கிய மாமல்லபுரம் அருகில், இந்த நீர்த்தேக்கம் அமைவதால், “மாமல்லன் நீர்த்தேக்கம்” என்று இதற்கு பெயர் சூட்டுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கூறினார்.
மேலும், முட்டுக்காடு பகுதியில் கட்டப்பட்டு வரும், கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்துக்கு கடந்தாண்டு மே மாதம் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தற்போது பொருட்காட்சி அரங்கம், மாநாட்டு மண்டபம், கலையரங்க பார்வையாளர் மாடம் அமைக்கும் பணிகள் முடிந்து மேற்கூரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு நவம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு இந்த அரங்கம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
அப்போது, பணிகளை தரமாகவும், விரைவாகவும், குறித்த காலத்துக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நிகழ்வில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், நீர்வளத்துறை செயலாளர் ஜெ. ஜெயகாந்தன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தி.சினேகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.