புதுச்சேரியில் பொங்கலுக்குள் மாணவர்களுக்கு லேப்டாப்: முதல்வர் ரங்கசாமி

Chief Minister Rangasamy

முதல்வர் ரங்கசாமி

Updated on
1 min read

புதுச்சேரி: ‘புதுச்சேரியில் பொங்கலுக்குள் இடைநிலை ஆசிரியர்கள், செவிலியர் பணியிடம் நிரப்பப்படும். கல் வீடு கட்டும் திட்டத்துக்கு முதல் தவணையும், மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்பும் பொங்கலுக்குள் தரப்படும்’ என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி மின்துறையில் நேரடி நியமனம் மூலம் 159 கட்டுமான உதவியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தற்போது 135 பேருக்கு மட்டும் புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் நினைவு மண்டபத்தில் பணி நியமன ஆணை இன்று வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, பேரவைத் தலைவர் செல்வம், மின்துறை அமைச்சர் நமச்சிவாயம், துறைச்செயலர் முத்தம்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி பேசியது: “இதுவரை சுமார் 5 ஆயிரம் பணிகளை நிரப்பி உள்ளோம். பொங்கலுக்குள் இடைநிலை ஆசிரியர்கள், 256 செவிலியர்கள் பணியிடங்களை நிரப்ப உள்ளோம். மாணவர்களுக்கு பொங்கலுக்குள் லேப்டாப் தரப்படும். கல் வீடு கட்டும் திட்டத்துக்கு 1,700 பேருக்கு பொங்கலுக்குள் முதல் தவணைத்தொகை தரப்படும்.

மத்திய அரசு நமக்கு கூடுதல் நிதி தர உள்ளது. விளையாட்டுத்துறைக்கு ரூ. 200 கோடி தர உள்ளதாக தெரிவித்துள்ளனர். புதுச்சேரி வளர்ச்சிக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த புதுச்சேரி வரும்போது பிரதமர் மோடி, இன்னும் கூடுதலான நிதியை அறிவிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

தேர்தல் அறிவிப்பு மார்ச்சுக்குள் வரும். அதற்கு முன்னதாக பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு குழுவை அமைத்துள்ளோம். தேர்தல் வந்துவிட்டாலும், தேர்வு குழு மூலம் பணிக்கான தேர்வு நடத்தி பணிகளை நிரப்புவோம்” என்றார்.

முதல்வர் ரங்கசாமி பேசுகையில், “அசிஸ்டெண்ட் பதவி கிடைப்பதே சிரமம். படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு தந்து நியமிக்கிறோம். இளைஞர் ஒருவருக்கு காரைக்காலில் பணி கிடைத்துள்ளது. அதற்குள் அவர் சர்வீஸ் பிளேஸ்மென்ட் கேட்டு என்னிடம் வந்தார். நாங்கள் நாள்தோறும் 200 கி.மீ வரை சுற்றுகிறோம். வயதான பிறகு சர்வீஸ் பிளேஸ்மென்ட் கேட்டால் பரவாயில்லை. 27 வயசில் இப்படி கேட்கலாமா? - மக்களுக்கு எப்படி வேலை செய்வாய் எனக்கேட்டு அவரை காரைக்காலில் பணியில் சேர சொல்லி அனுப்பினேன்” என்றார்.

இந்நிகழ்வில் பேரவைத் தலைவர் செல்வம் பேசுகையில், “மத்திய அரசின் ரூ. 106 கோடி உதவியுடன் மின்துறை பிரச்சினை தீர்க்க பணி நடக்கிறது” என்றார்.

அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், “நேர்மையான முறையில் அனைத்து இடங்களும் மதிப்பெண் அடிப்படையில் நிரப்புகிறோம். தடையற்ற மின்சாரம் தர மத்திய அரசிடம் கூடுதலாக 100 மெகாவாட் கேட்டு பெற்றுள்ளோம்” என்றார்.

Chief Minister Rangasamy
“ஆளும் திமுகவின் சமூக நீதி கண்களை பெரியாராவது திறக்கட்டும்” - அன்புமணி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in