

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் தாயார் துர்கா ஸ்டாலின்.
சென்னை: தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 49-வது பிறந்தநாள் திமுகவினரால் நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் உதயநிதி மலர்கள் தூவி மரியாதை செலுத்தி, தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அதேபோல, வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர், சிஐடி காலனி இல்லத்துக்குச் சென்று, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியிடம் வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லம் சென்று, அவரது படத்துக்கும் மரியாதை செலுத்தினார்.
மேலும், குறிஞ்சி இல்லத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த தொண்டர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்றார். இதையொட்டி, திருவல்லிக்கேணியில் உள்ள அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு திமுக எம்.பி. தயாநிதி மாறன் மோதிரம் வழங்கி, பரிசுப் பெட்டகங்களை வழங்கினார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சித் தலைவர்கள், திரைத்துறையினர் உட்பட பலர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மேலும், திமுக சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி கழக செயலாளர் பெருங்குடி எஸ்.வி.ரவிசந்திரன், அருணை கல்விக் குழுத்தின் துணைத் தலைவர் எ.வ.குமரன், நிர்வாக இயக்குநர் எ.வ.வே.கம்பன் உள்ளிட்டோரும் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “கொள்கைப் பற்றோடு உழைப்பாலும் உயர்ந்து வரும் உதயநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். இளை
ஞரணிச் செயலாளராக, விளையாட்டுத் துறை அமைச்சராக, துணை முதல்வராக ஆற்றிவரும் பணிகளை மக்களும், கட்சியினரும் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும்போது, தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன்.
திமுக தலைமைத் தொண்டனாக நான் உனக்கு அறிவுறுத்துவது, காட்சிக்கு எளியவனாக, கடுஞ்சொல் சொல்லாதவனாக, மக்களின் அன்புக்குரியவனாக, எப்போதும் அவர்களுக்காக களத்தில் நிற்பவனாக திகழவேண்டும்” என பதிவிட்டுள்ளார்.