பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் மறைவு: முதல்வர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி

ஏவி.எம்.சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஏவி.எம்.சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Updated on
3 min read

சென்னை: பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 86. அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்த் திரையுலகில் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஏவி.எம் நிறுவனத்தை தொடங்கியவர் ஏவி.மெய்யப்ப செட்டியார். அவர் மறைந்த பிறகு, அவரது மகன் ஏவி.எம்.சரவணன், தனது சகோதரர்களுடன் இணைந்து அந்த நிறுவனத்தை நிர்வகித்து வந்தார்.

கடந்த 1959-ம் ஆண்டும் ஏவி.எம் தயாரித்த ‘மாமியார் மெச்சிய மருமகள்’ படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக திரையுலகப் பயணத்தை தொடங்கிய அவர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளார்.

1980-களில் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றி, வணிக ரீதியில் பலவெற்றி படங்களை உருவாக்கினார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகுமார், ராஜ்குமார் போன்ற முன்னணி நடிகர்களின் பயணத்தில் ஏவி.எம் நிறுவனத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>சென்னையில் நேற்று காலமான திரைப்பட தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த், டி.ஜெயக்குமார், வைகோ, சீமான், சிவகுமார், சூர்யா, விஷால், மணிரத்னம், எஸ்.ஏ.சந்திரசேகர், நல்லி குப்புசாமி. 									                    படங்கள்: எல்.சீனிவாசன்</p></div>

சென்னையில் நேற்று காலமான திரைப்பட தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த், டி.ஜெயக்குமார், வைகோ, சீமான், சிவகுமார், சூர்யா, விஷால், மணிரத்னம், எஸ்.ஏ.சந்திரசேகர், நல்லி குப்புசாமி. படங்கள்: எல்.சீனிவாசன்

ரஜினி நடிப்பில் முரட்டுக்காளை, நல்லவனுக்கு நல்லவன், மிஸ்டர் பாரத், எஜமான், சிவாஜி உட்பட பல படங்களை தயாரித்துள்ள ஏவி.எம் நிறுவனம், களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் கமல்ஹாசனை அறிமுகப்படுத்தியது.

பின்னர் அவரது நடிப்பில் சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே, கே.பாக்யராஜின் முந்தானை முடிச்சு, விஜயகாந்தின் சிவப்பு மல்லி, மாநகர காவல், அஜித்குமார் நடித்த திருப்பதி, விஜய்யின் வேட்டைக்காரன், சூர்யாவின் அயன் உட்பட பல வெற்றிப் படங்களைத் தயாரித்தது.

இதில் ஏவி.எம்.சரவணனின் பங்கு முக்கியமானது. சிறு முதலீட்டில் ஏவி.எம் தயாரித்த சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம், தேசிய விருது பெற்றது. பல சின்னத்திரை தொடர்களையும் இந்த நிறுவனம் மூலம் தயாரித்தார் சரவணன். எப்போதும் வெள்ளை உடை, நெற்றியில் குங்குமம், கனிவான, பணிவான பேச்சு என எளிமையின் அடையாளமாக இருந்தவர் ஏவி.எம் சரவணன்.

எல்லோரிடமும் சகஜமாகப் பழகக்கூடியவர். இவர், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காக அவ்வப்போது சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக நேற்று அதிகாலை 5.30 மணிக்கு காலமானார்.

பின்னர், ஏவி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகுமார், விஜயகுமார், சூர்யா, விஷால், பார்த்திபன், நடிகர் சங்கத் தலைவர் நாசர், இயக்குநர் எஸ்பி.முத்துராமன் மற்றும் அரசியல் தலைவர்கள், திரையுலகினர் திரளாக வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஏராளமான பொதுமக்களும் நீண்ட வரிசையில் வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், ஏவி.எம் ஸ்டுடியோ பின்புறம் உள்ள மயானத்தில் நேற்று மாலை இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. இந்திய திரைப்படக் கூட்டமைப்பின் தலைவர், தமிழ்நாடு சுற்றுலா வாரியத்தின் பண்பாட்டுக் கழக இயக்குநர், சென்னை மாநகரஷெரிஃப் ஆகிய பொறுப்புகளை ஏவி.எம்.சரவணன் வகித்துள்ளார்.

தமிழக அரசின் ‘கலைமாமணி’, புதுச்சேரி அரசின் ‘பண்பின் சிகரம்’ ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். அவரது மறைவுக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் மற்றும் திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த ஏவி.எம்.சரவணனுக்கு குகன் என்ற மகன், உஷா என்ற மகள் உள்ளனர். டிச.3-ம் தேதி அவருக்கு 86-வது பிறந்தநாள். அதற்கு அடுத்த நாளே அவர் காலமானது, குடும்பத் தினரையும், திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தலைவர்கள் இரங்கல்:

ஏவி.எம். சரவணன் மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்திகள் வருமாறு:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: தமிழ் திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏவி.எம். நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு ஏவி.எம். நிறுவனத்தின் பாதையைத் தீர்மானித்ததில் சரவணனின் பங்கும் அளப்பரியது.

அண்ணாவின் ஓர் இரவு, கருணாநிதியின் பராசக்தி, முரசொலி மாறனின் குலதெய்வம் என ஏவி.எம். நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு. எங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர் ஏவி.எம்.சரவணன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: ஏவி.எம் நிறுவனம் வாயிலாக அவர் தயாரித்த பல்வேறு வெற்றித் திரைப்படங்கள், தமிழ் சினிமாவின் வணிகத்தையும் மதிப்பையும் உலகளவில் உயர்த்தியவை என்றால் அது மிகையாகாது. தமிழ் திரைத்துறையினரின் பெரும் மரியாதைக்கு உரிய ஏவி.எம். சரவணனின் மறைவு, ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கும், பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்குவதற்கும் ஏவி.எம்.சரவணன் செய்த பணி என்றும் நினைவில் நிலைக்கும்.

நடிகர் ரஜினிகாந்த்: ஜென்டில்மேன் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர், என்னுடைய கஷ்ட காலங்களில் துணையாக நின்றவர். ஏவி.எம்.மில் 9 படங்கள் நடித்துள்ளேன், அனைத்தும் வெற்றி படங்கள். அதற்கு முழு காரணம் சரவணன். அவரின் மறைவு மனதை பாதிக்கிறது.

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்: இந்தியத் திரைப்படத் துறையில் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஏவி.எம். நிறுவனத்தை சரவணன் திறமையாக நடத்தினார். அவர் மாறுபட்ட கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து, முழு குடும்பத்தினரும் பார்க்கக்கூடிய படங்களைத் தயாரித்தார். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, அமைச்சர் மு.பெ.சாமிநாதன், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

<div class="paragraphs"><p>ஏவி.எம்.சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்.</p></div>
டெல்லியில் அமித் ஷா, ஜெ.பி.நட்டாவுடன் அண்ணாமலை சந்திப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in