

தீரன் சின்னமலை பிறந்தநாளை முன்னிட்டு, அண்ணா அறிவாலயத்தில், அவரது படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி அவரது படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 271-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலையின்படத்தக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மருத்துவ அணி தலைவர் கனிமொழி என்விஎன் சோமு, மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ உடனிருந்தனர். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் தீரன் சின்னமலையின் படத்துக்கு மரியாதை செலுத்தினார். சங்ககிரியில் உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்தில், சின்னமலையின் உருவப்படத்துக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார்.
இதற்கிடையே அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்ட செய்திகளில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்: ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து 3 முறை போர் தொடுத்து வென்ற மாபெரும் வீரர் தீரன் சின்னமலை, தமிழர்களின் பெருமை அவர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: நேரடியாகப் போரிட்டு வெல்ல முடியாத ஆங்கிலேய ஆதிக்கவாதிகள் சூழ்ச்சியால்தான் சின்னமலையை வீழ்த்த முனைந்தார்கள். இன்றோ, தமிழகத்துக்குள் நேரடியாக நுழைய முடியாத டெல்லி ஆதிக்கவாதிகள் 'தொகுதி மறுவரையறை' எனும் சதித் திட்டத்தால் நம்மை அரசியல் வலிமையற்றவர்களாக்க முனைகிறார்கள்.
அன்று, சின்னமலையைக் காட்டிக் கொடுத்தான் ஒரு துரோகி. இன்றும் சில அடிமைகள் தங்கள் சுயநலத்துக்காக தமிழகத்தின் எதிர்காலத்தையே ஆர்எஸ்எஸ் எஜமானர்களின் காலடியில் அடகு வைக்கின்றனர். இந்த ஆதிக்கவாதிகளையும், அடிமைகளையும் எதிர்த்து தமிழகம் போராடும், தமிழகம் வெல்லும்
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த மாவீரர் தீரன். இன்றைக்கு கர்நாடக காங்கிரஸ் அரசிடம் தமிழகத்தின் நீராதார உரிமைகளையும், பாலியல் சார்-களிடம் தமிழக பெண்களின் பாதுகாப்பையும், போதை மாஃபியாக்களிடம் இளைஞர்களின் எதிர்காலத்தையும் அடகு வைத்துவிட்டது திமுக.
ஒவ்வொரு தமிழரின் வாழ்வையும் காக்க வேண்டிய வரலாற்று போர்களத்தில், சின்னமலை விதைத்த தீரத்தோடு திமுகவை வீழ்த்திட சூளுரைப்போம்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக இறுதி மூச்சுவரை அசைக்க முடியாத உறுதியுடன் போராடிய மாவீரர் தீரன் சின்னமலையில் பிறந்த நாளை மரியாதையுடன் நினைவுகூர்கிறோம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக தன்னலமின்றி போராடி, தமிழகத்தின் மண்ணுக்கு மரியாதை சேர்த்த மாவீரன் சின்ன மலையின் புகழை போற்றுவோம்.
பாமக தலைவர் அன்புமணி: வெள்ளையர்களுக்கு எதிராக வீரத்துடன் போரிட்ட தீரன் சின்னமலையின் பிறந்தநாளில், அவரது தீரத்தையும், தேசப்பற்றையும் போற்றி வணங்குவோம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தான் பிறந்த மண்ணின் விடுதலைக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த மாபெரும் வீரர் தீரன் சின்னமலையை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.