

சென்னை: மூத்த பத்திரிகையாளர் பிடிஐ ராமசாமி, சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிடிஐ செய்தி நிறுவனத்தின் முன்னாள் மண்டல மேலாளரும், மூத்த பத்திரிகையாளருமான எஸ்.ராமசாமி (74), சென்னையில் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.
பத்திரிகையாளர் வட்டாரங்களில் ‘எஸ்.ஆர்’ என்று அழைக்கப்பட்ட இவர், 1978-ம் ஆண்டு பிடிஐ செய்தி நிறுவனத்தின் இணைந்து, 30 ஆண்டுகள் பணியாற்றியவர்.
திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் அரசியல் நகர்வுகளை பதிவு செய்தவர். மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி மற்றும் மூத்த தலைவர்களான ஜி.கே.மூப்பனார் ஆகியோருடன் தனிப்பட்ட முறையில் நட்புறவு கொண்டிருந்தவர்.
அரசியல் வட்டாரத்தில் இவர் பிடிஐ ராமசாமி என்றே அறியப்பட்டார். இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். ராமசாமியின் இறுதிச் சடங்குகள் பெசன்ட்நகரில் இன்று நடைபெறுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், பிடிஐ செய்தி நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர் ராமசாமி மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
பிடிஐ ராமசாமி என்று அழைக்கப்படும் அளவுக்கு தமிழகத்தில் பிடிஐ நிறுவனத்தின் அடையாளமாகவே மாறிப்போனார். அவரது மறைவு ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும் என தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக தலைவர் அன்புமணி, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.