

சென்னை: கொளத்தூரில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்துள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் திங்கள் அல்லது செவ்வாய்கிழமை விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் தேர்தலில் இரண்டாமிடம் பிடித்த ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று கொளத்தூர் தொகுதியில் 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேடு எனப்படும் ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.
அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், எனவே கொளத்தூர் தொகுதியில் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக்கோரியும் ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முறையீடு செய்தார்.
அதையேற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கு வரும் திங்கள் அல்லது செவ்வாய்கிழமை வழக்கம்போல விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.