

அர்ச்சனா பட்நாயக்
சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15-ம் தேதி பொதுத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
இவை தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நேற்று வரை, பொது இடங்களில் இருந்த 4,54,321 சுவர் விளம்பரங்கள், தனியார் இடங்களில் இருந்த 2,56,041 விளம்பரங்கள் அகற்றப்பட்டு, 544 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிகளைத் தீவிரமாகக் கடைபிடிக்கவும், தேர்தல் விதிமீறல்களைத் தடுக்கவும் தமிழகம் முழுவதும் மொத்தம் 2,169 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் சி விஜில் செயலி மற்றும் பிற வழிகள் மூலம் பெறப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. முக்கிய இடங்கள் மற்றும் சோதனைச் சாவடிகளில் மொத்தம் 2,166 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
பறக்கும்படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் நடவடிக்கையில் இதுவரை, ரூ.34.64 கோடி ரொக்கம், ரூ.79 லட்சம் மதிப்பிலான மதுபானம், ரூ.6.76 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள், ரூ.112.37 கோடி மதிப்பிலான தங்கம், வைரம், ரூ.24.22 கோடி மதிப்பிலான பரிசுப் பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் என ரூ.178.78 கோடி மதிப்பில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஏப்.9-ம் தேதி காலை 7 மணி முதல் ஏப். 29-ம் தேதி மாலை 6.30 மணி வரை, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது தடை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.