

சென்னை: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நிலுவையில் உள்ள வழக்குகள் விவரங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் அல்லது தண்டனை விவரங்களை உரிய படிவங்களில் செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய வேண்டும்.
அதேபோல், அத்தகைய வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகளும் அந்த விவரங்களை ஊடகங்கள் மற்றும் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் வெளியிட வேண்டும்.
தேர்தல் ஆணையம் இதற்கென பிரத்யேக படிவங்களை வரையறுத்துள்ளது. வேட்புமனு திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளுக்கு அடுத்த நாள் முதல், வாக்குப்பதிவு முடிவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு வரை 3 முறை வெவ்வேறு நாட்களில் இந்த விளம்பரங்களை வெளியிட வேண்டும்.
வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட 48 மணி நேரத்துக்குள் அல்லது வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பாகவே (இதில் எது முந்தையதோ அதன்படி) விவரங்களை வெளியிட வேண்டும்.
இது தொடர்பான அறிக்கையை அடுத்த 72 மணி நேரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான முழுமையான அறிவுரைகள், அங்கீகரிக்கப்பட்ட செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளின் பட்டியலை அறிந்து கொள்ள பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் www.elections.tn.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.