

செங்கல்பட்டு மாவட்டத்தின் கடைசி பகுதியில், கடற்கரையை அடையாளமாகக் கொண்டுள்ளது செய்யூர் (தனி) தொகுதி. இது தொகுதிகளின் வரிசைப் பட்டியலில் 34-வதாக இடம்பெற்றுள்ளது.
தொகுதி மறுசீரமைப்பின்போது, அப்போதைய மதுராந்தகம் பொதுத் தொகுதியில் இருந்து நீக்கப்பட்ட லத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் 41 ஊராட்சிகள், அச்சிறுபாக்கம் தொகுதியிலிருந்து நீக்கப்பட்ட சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தின் 43, செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதியில் இருந்து நீக்கப்பட்ட திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தின் 21 கிராம ஊராட்சிகள் மற்றும் இடைக்கழிநாடு பேரூராட்சியை உள்ளடக்கி செய்யூர் (தனி) சட்டப்பேரவை தொகுதி 2011-ல் உருவாக்கப்பட்டது.
இத்தொகுதியில், பழமையான ஆலம்பர கோட்டை, உப்பளம், தமிழக சுற்றுலாத் துறையின் முதலியார் குப்பம் படகு குழாம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில், கல்பாக்கம் அணுமின் நிலையம் என பல முக்கிய அடையாளங்கள் அமைந்துள்ளன.
செய்யூர் தொகுதி உருவாக்கப்பட்டு 2011-ம் ஆண்டு நடைபெற்ற முதல் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் வி.எஸ்.ராஜி வெற்றி பெற்றார். 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவின் ஆர்.டி.அரசு வெற்றி பெற்றார். இதையடுத்து, 2021-ம் ஆண்டு தேர்தலில் திமுகவின் கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பாபு, 82,750 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்
செய்யூர் தொகுதியில் கிராமப்புறங்கள், மீனவ கிராமங்கள் அதிகம் உள்ளன. அதேநேரம், மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் அவ்வளவாக நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இங்கு, வேலைவாய்ப்பை ஏற்படுத்த தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்.
பனை பொருட்கள் தயாரிப்பு ஆலை முடக்கப்பட்டுள்ளதால், அதை சீரமைத்து மீண்டும் பனை பொருட்கள் தயாரிப்பு ஆலையை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும், மாம்பழ கூழ் தயாரிக்க தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் பெருமளவில் செம்மண் பூமியாக உள்ளதால் தர்பூசணி உள்பட கொடிவகை பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யும் நிலையில், தோட்டக்கலை பயிர்களை ஊக்கப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
அதேபோல், கடந்த 2009-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட செய்யூர் அனல்மின் நிலையத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பயன்பாடின்றி உள்ளன. அதேபோல், கடப்பாக்கத்தில் துறைமுகம் அமைக்கும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் எல்லாம் பயன்பாட்டுக்கு வந்தால், இப்பகுதி பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தொகுதியில் ஆதி திராவிடர் மக்கள் மற்றும் வன்னியர் சமூதாயத்தினர் சரிசமமான அளவில் வசிக்கின்றனர். முதலியார் சமுதாயத்தினர் மற்றும் பழங்குடியினர், மீனவர்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். இருப்பினும், ஆதிதிராவிடர் மற்றும் வன்னியர் சமுதாய மக்களே தேர்தல் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவர் களாக உள்ளனர்.
வேட்பாளர்கள் பின்புலம்
இந்த தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் விசிகவைச் சேர்ந்த சிந்தனைச்செல்வன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ராஜசேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் சுவாதிலட்சுமி, தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மோகனராஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
செய்யூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருமே புதுமுகமாக உள்ளதால் முடிவை கணிக்க முடியாத நிலை உள்ளது. எனினும், ஏற்கெனவே, விசிக வசமிருந்த தொகுதி என்பதால் விசிக வேட்பாளருக்கு சாதகமான நிலை உள்ளது.
அதேநேரம், அதிமுக வேட்பாளராக களம் காணும் ராஜசேகர், ஏற்கெனவே 2024-ம் ஆண்டு நடைபெற்ற மக்களைத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டவர் என்பதால், தொகுதிக்கு சற்று அறிமுகமானவராக உள்ளார். அதனால், இந்த தேர்தலில் வெற்றிக் கனியை பறிப்பவர் யார் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.
வாக்காளர்கள் விவரம்
ஆண் - 97,351
பெண் - 97,351
மூன்றாம் பாலினத்தவர் - 18
மொத்த வாக்காளர்கள் - 1,95,861