

சென்னை: இந்த நிதியாண்டில், 150 கி.மீ. தூரத்துக்கு ரயில் தண்டவாளத்தை புதுப்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: ரயில்களை பாதுகாப்பாக இயக்க, வேகம் அதிகரிப்புக்கு ஏற்ப தண்டவாளத்தின் தரம், பாலங்களின் உறுதித்தன்மை அவசியமாகிறது.
அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாக, ரயில்வே பாலங்களை புதுப்பிப்பது, பழைய தண்டவாளங்களை நீக்கி புதியதாக அமைப்பது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த நிதியாண்டில், சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 141 கி.மீ. தொலைவுக்கு தண்டவாளங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
இதுபோல 143 கி.மீ. தொலைவுக்கு பழைய சிலீப்பர்கள் அகற்றப்பட்டு, புதியதாக அமைக்கப்பட்டுள்ளன. இப்பணிகளை விரைந்து மேற்கொள்ள டி.ஆர்.டி. எனப்படும் டிராக் லேயிங் டிரேன் என்ற அதிநவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நிதியாண்டில், மொத்தம் 150 கி.மீ. தொலைவுக்கு ரயில்வே தண்டவாளத்தை புதுப்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்கவுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.