

கோப்புப் படம்
சென்னை: தேர்தல் முடிவுகளால் கட்சியினரிடையே மோதல் ஏற்படாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையின் 16 தொகுதிகளையும் டிஜிட்டல் முறையில் சென்னை போலீஸார் கண்காணித்தனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்த நிலையில் நடைபெற்ற தேர்தல் முடிவு கருத்து கணிப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருந்தன. இதனால் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற குழப்பமான சூழல் காணப்பட்டது.
தேர்தல் முடிவுக்காக தமிழகமே மே 4-க்காக காத்திருந்தது. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கட்சியினரிடையே மோதல் ஏற்படாமல் முன்னரே தடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதற்காக கடந்த 3 நாட்களாக போலீஸார் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் கண்காணிப்பு மேற்கொண்டனர்.
தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆலோசனைப்படி சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதி வரைப்படங்கள் தனித்தனியாக எடுக்கப்பட்டு அவை வகைப்படுத்தப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன.
மொத்த வேட்பாளர்கள், அவர்களின் வீடுகள், அவர்கள் சார்ந்த கட்சி அலுவலகம் உள்ள இடம் போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் தகராறில் ஈடுபட வாய்ப்பு உள்ளதா என ஆலோசிக்கப்பட்டது.
அதன்படி, 692 இடங்கள் அடையாளம் காணப்பட்டு அவை வகைப்படுத்தப்பட்டன. அந்த பகுதிகளின் தன்மைக்கு ஏற்ப போலீஸார் காவல் வாகனங்களுடன் பணியமர்த்தப்பட்டனர். அவர்களை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து போலீஸ் அதிகாரிகள் தொழில்நுட்ப உதவியுடன் கண்காணித்தனர்.
இதற்கு வசதியாக காவல் வாகனங்களில் ஜிபிஎஸ் உள்ளிட்ட கருவிகள் பொருத்தப்பட்டன. பணியில் உள்ள போலீஸாரின் பட்டியல் மற்றும் அவர்களது செல்போன் எண்ணும் சேகரிக்கப்பட்டது.
தொடர்ந்து துணை ராணுவப் படையினர், சென்னை போலீஸாருடன் ஒருங்கிணைந்தும், அடுத்த கட்ட கண்காணிப்பில் சென்னை போலீஸார் தனியாகவும் ஈடுபட்டனர். மேலும், சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதலாக போலீஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
அதோடு கட்சியினர் யாரேனும் மோதலில் ஈடுபட்டால் அவர்களை உடனடியாக கைது செய்து அடைத்து வைக்க 21 திருமண மண்டபங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.