சென்னை 2-ம் கட்ட மெட்ரோ: 3 நாளில் 3 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பணிகளை முடித்து சாதனை

சென்னை 2-ம் கட்ட மெட்ரோ: 3 நாளில் 3 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பணிகளை முடித்து சாதனை
Updated on: 
1 min read

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், தொடர்ந்து மூன்று நாட்களில் 3 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் தங்கள் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, வரலாற்றுச் சாதனை படைத்துள்ளன.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் சுரங்கப் பாதை பணிகள் மிக முக்கியமானது. தற்போது, பல்வேறு இடங்களில் சுரங்கம் தோண்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்,  கடந்த 3 நாட்களில் 3 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் தங்கள் பணிகளை நிறைவு செய்து, இலக்கை எட்டி, சாதனை படைத்துள்ளன.

செப்டம்பர் 29-ம் தேதி மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில் காவேரி இயந்திரம் கீழ்ப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

செப்டம்பர் 30-ம் தேதி மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில் 'மருதம்' என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம், வில்லிவாக்கம் பேருந்து நிலைய மெட்ரோ நிலையத்தை வந்தடைந்தது.

இன்று (அக்.1) 3-வது வழித்தடத்தில் "அடையாறு" இயந்திரம் 915 மீட்டர் நீள சுரங்கப் பணியை 277 நாட்களில் முடித்து, ஆர்.கே.சாலை மெட்ரோ நிலையத்தை வந்தடைந்தது.

சவால்களைக் கடந்த சாதனை: 

'அடையாறு’ சுரங்கம் தோண்டும் இயந்திரம், ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள பீட்டர்ஸ் பாலம், இபிஎஃப்ஓ அலுவலகம், ஆந்திரா பள்ளி மற்றும் பல்வேறு நெரிசலான கட்டிடங்களுக்கு அடியில், 9 முதல் 13 மீட்டர் ஆழத்தில் பாதுகாப்பாகச் சுரங்கப்பாதை அமைத்துள்ளது.

நகர்ப்புற நெரிசல் மற்றும் பல சவாலான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், சுற்றியுள்ள கட்டிடங்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி இச்சாதனை வெற்றிகரமாக எட்டப்பட்டுள்ளது.

இந்த வெற்றிகரமான நிகழ்வின் போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் மற்றும் உயர் அதிகாரிகள், பணியாளர்கள் உடனிருந்தனர்.

சென்னை 2-ம் கட்ட மெட்ரோ: 3 நாளில் 3 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பணிகளை முடித்து சாதனை
“அதிமுகவை ஏன் தொட்டோம் என முதல்வர் விஜய் கதறும் நாள் விரைவில் வரும்” - ஆர்.பி.உதயகுமார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in