

சென்னை: நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தின் பி4 நுழைவாயில் வரும் 23-ம் தேதி முதல் நிரந்தரமாக மூடப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நந்தனத்தில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகள் காரணமாக, நந்தனம் மெட்ரோ நிலையத்தின் பி4 நுழைவாயில் பிஎஸ்என்எல் அலுவலகம் நோக்கி செல்லும் வழி, வரும் மார்ச் 23-ம் தேதி முதல் நிரந்தரமாக மூடப்படுப்படுகிறது.
இரண்டாம் கட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளை சுலபமாக்குவதற்கு, நந்தனம் மெட்ரோ நிலையத்தில் உள்ள தற்போதைய B4 நுழைவாயிலை மூடுவது அவசியமாகும்.
இது நீண்டகால அடிப்படையில் போக்குவரத்து இணைப்பு, பயணிகளின் வசதி மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதை உறுதி செய்யும். மேலும், தற்போதுள்ள முதலாம் கட்ட நந்தனம் மெட்ரோ நிலையத்துக்கான அணுகல் வசதி, இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் புதிதாகத் திறக்கப்படவுள்ள மெட்ரோ நிலைய நுழைவாயில் வழியாக பயணிகளுக்குக் கிடைக்கும்.
பயணிகள் தங்களின் பயணத்தை திட்டமிட்டு, அருகிலுள்ள மாற்று நுழைவாயில்களை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள், பி4 நுழைவாயிலின் அதேதிசையில் அமைந்துள்ள ஏ2 மற்றும் ஏ3 நுழைவாயில்கள்.
மேலும் எதிர்புறத்தில் அமைந்துள்ள பி1, பி2, மற்றும் பி3 நுழைவாயில்கள், இந்த நுழைவாயில்கள் அனைத்தும் அண்ணா சாலையிலேயே அமைந்துள்ளன. இவை முழுமையாக செயல்படுவதால், பயணிகள் எந்தவொரு சிரமமுமின்றி இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வழிகாட்டி பலகைகள்
பயணிகள் எளிதாகச் செல்வதை உறுதி செய்வதற்காக, மெட்ரோ ரயில் நிலைய வளாகத்திலும் அதைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களிலும் போதுமான வழிகாட்டிப் பலகைகள் மற்றும் அடையாளப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், பயணிகள் உதவிக்கு நிலைய பணியாளர்களை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.