

சென்னை: ரயில் பெட்டித் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்.) பயணிகளின் தேவை மற்றும் காலத்துக்கு ஏற்ப, அதிநவீன ரயில் பெட்டி, சுற்றுலாவுக்கான ரயில் பெட்டி உட்பட 50-க்கும் மேற்பட்ட வகைகளில் 600 வடிவமைப்புகளில் ரயில் பெட்டிகளை தயாரித்து வருகிறது.
இதுதவிர வந்தேபாரத் ரயில், அம்ரித் பாரத் ரயில்களும் தயாரித்து வழங்கப்படுகின்றன. சமீபத்தில் இங்கு 80 ஆயிரமாவது ரயில் பெட்டி தயாரிக்கப்பட்டது. இந்த ஆலையில் 2025-26-ம் நிதியாண்டில் அதிக பெட்டிகள் தயாரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐசிஎஃப் அதிகாரிகள் கூறியதாவது: 2025-26-ம் நிதியாண்டில் மட்டும் 3,405 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2024-25-ம் நிதியாண்டில் 3007 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. இதனுடன் ஒப்பிடும்போது தற்போது 13.2 சதவீதம் உற்பத்தி உயர்ந்துள்ளது.
புதிய ரயில் பெட்டிகளில் வந்தே பாரத் தூங்கும் வசதி பெட்டிகள், வந்தே பாரத் ரயிலில் அமரும் நாற்காலி பெட்டிகள், மின்சார மற்றும் மெமு ரயில்களின் குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்டவை மட்டும் 2,548 பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
22 அம்ரித் பாரத் ரயில்களுக்குரிய பெட்டிகளும் இதில் அடங்கும். கொல்கத்தா மெட்ரோவுக்கு உரிய ரயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.