

அபிராமி
சென்னை: திருமணத்தை மீறிய உறவு காரணமாக குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில், சிறையில் உள்ள அபிராமிக்கு ஜாமீன் வழங்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரைச் சேர்ந்த விஜய் - அபிராமி தம்பதிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் (6 வயது, 4 வயது) இருந்தனர். டிக்-டாக் மூலமாக சமூக வலைதளங்களில் பிரபலமான அபிராமிக்கும், அப்பகுதியில் பிரியாணிக் கடை நடத்தும் மீனாட்சி சுந்தரம் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டது. இந்த உறவுக்கு தடையாக இருந்த தனது 2 குழந்தைகளையும் அபிராமி கடந்த 2018-ம் ஆண்டு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார்.
பின்னர், கேரளாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற அபிராமி, மீனாட்சி சுந்தரத்தை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம், அவர்கள் இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்தும், தண்டனையை நிறுத்திவைத்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அபிராமி மேல்முறையீடு செய்தார்.
நீதிபதிகள் என்.சதீஷ்குமார், கே.ராஜசேகர் அமர்வி்ல் இந்த மனு விசாரணைக்கு வந்தது. குற்றசம்பவத்துக்கு நேரடி ஆதாரங்கள் இல்லாததால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அபிராமி தரப்பில் வாதிடப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கின் முதல் சாட்சியான அபிராமியின் கணவர் அளித்துள்ள சாட்சியத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட பால் கசப்பாகவும், விஷம் கலந்து இருந்ததாகவும் தெரிவி்த்துள்ளார். இது தண்டனையை நிறுத்தி வைக்கும் அளவுக்கு தகுதியான வழக்கு அல்ல என்று கூறி அபிராமியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, பிரதான வழக்கு விசாரணையை நவ.4-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.