

சென்னை: சென்னை மண்ணடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மண்ணடி தெரு, லிங்கிச்செட்டி தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சாலையோர கடைகள் மற்றும் உணவகங்களை அகற்ற மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரி, சென்னை ப்ராட்வேயை சேர்ந்த அரசு என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், 2020-ம் ஆண்டே இது சம்பந்தமாக மனுத்தாக்கல் செய்திருந்ததாகவும், அப்போது அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டுவிட்டதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்புகள் இன்னும் நீடிப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
சாலைகளில் ஆபத்தான முறையில் சிலிண்டர்கள் வைத்து சமைக்கப்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மாநகராட்சி தங்களது பணியை பார்க்க நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை உள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சாலைகள் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வு, ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநாகராட்சிக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.