

சென்னை: முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட தன்னை சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக வழக்குப் பதிவு செய்த தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், அவரை கைது செய்தனர்.
இதனிடையே, தன்னை சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மார்க்கண்டேயன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார். அப்போது எம்எல்ஏ மார்க்கண்டேயன் தரப்பில், ‘சட்டமன்றம் பூட்டப்படும் எனக் கூறிய முதல்வருக்கு பதிலளிக்கும் வகையில் தான் பேசியுள்ளார். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. மாஜிஸ்திரேட் இயந்திரத்தனமாக சிறையில் அடைத்து உத்தரவிட்டுள்ளதால், மனுதாரரை சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என வாதிடப்பட்டது.
காவல் துறை தரப்பில், ‘சட்டமன்றம் கூட உள்ள நிலையில் இந்த மிரட்டல் உண்மையா என சோதிக்க முடியாது. பொதுவெளியில் பேசிய பேச்சு இது. கைது நடவடிக்கை எடுக்காவிட்டால் இதே குற்றத்தை அவர் மீண்டும் செய்யக் கூடும். மாஜிஸ்திரேட் அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்து திருப்தியடைந்த பிறகே சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் எந்த தவறும் இல்லை’ என வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.
இந்நிலையில், இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் மார்க்கண்டேயன் ஏற்கெனவே நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.