

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:
”டாக்டரான மோனிகா, முதுகலை மருத்துவப் படிப்பை அரசு மருத்துவக் கல்லூரியில் முடித்தார். அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிப்பவர்கள், அரசு மருத்துவமனையில் கட்டாயம் பணியாற்ற வேண்டும். ஆனால் மோனிகா அவ்வாறு பணியாற்றாததால் படிப்புக்கான செலவுத் தொகை ரூ.40 லட்சத்தை செலுத்த கடந்த ஆண்டு ஜூனில் மருத்துவத் துறை கடிதம் அனுப்பியது.
ஆனால் மோனிகா அந்த தொகையை செலுத்தவில்லை. அவரிடம் இருந்து அந்த தொகையை வசூலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில்,”அரசு ஒதுக்கீட்டில் படித்து விட்டு அரசு மருத்துவமனையில் பணியாற்றாத டாக்டர் மோனிகாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் மோனிகாவுக்கு எதிராக இந்த வழக்கைத் தொடர மனுதாரருக்கு எந்த உரிமையும் இல்லை” என தெரிவிக்கப்பட்டது.
டாக்டர் மோனிகா தரப்பில், ”இந்த வழக்கில் எனக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருப்பது எனது மாமனார் தான். குடும்ப பிரச்சினையில் எனது மாமனார் என்பதை மறைத்து அவர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
எனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வழக்கு நிலுவையில் இருப்பதால் என்னைப்பற்றி ஏற்கெனவே மருத்துவ கவுன்சிலுக்கும் புகார் அனுப்பியுள்ளார். மருத்துவ கவுன்சில் அந்த புகாரை தள்ளுபடி செய்தது. அடுத்தகட்டமாக தற்போது இந்த வழக்கை நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார்” என வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி, ”கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்று சென்று வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தான் மாமனார் என்பதை மறைத்து மருமகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரரின் செயல் ஏற்புடையதல்ல. இதுபோன்ற வழக்குகள் துரதிருஷ்டவசமானது.
கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்தால் அதை பெரியவர்கள் தலையிட்டு சுமுகத் தீர்வு காண வேண்டும். ஆனால் பிரச்சினை இன்னும் பூதாகரமாகி விஸ்வரூபம் எடுக்க அவர்களே காரணமாகி விடக்கூடாது. மருமகளைப் பழிவாங்கும் நோக்கில் மனுதாரர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
எனவே மனுதாரருக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கிறேன். இந்த தொகையை அவர் மருத்துவ கல்வி இயக்குநரிடம் செலுத்த வேண்டும், எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.