

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம்
சென்னை: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘மதுரை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தபோது, கிரானைட் முறைகேட்டை விசாரிக்க என்னை ஆணையராக உயர் நீதிமன்றம் நியமித்தது.
உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் அரசுக்கு 1 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தேன்.
இந்த அறிக்கையின் அடிப்படையில், மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் எனக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு, 2023-ம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதால், கிரானைட் முறைகேடு வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள என்னால், நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலவில்லை.
அச்சுறுத்தல்கள் தொடர்வதால் பாதுகாப்பை தொடர்ந்து வழங்கக் கோரி கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து மீண்டும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சகாயம் தரப்பில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது. எனவே, மீண்டும் தனக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசுத் தரப்பில், பாதுகாப்பு வழங்க கோரி மனுதாரர் அளித்த மனு, மறு ஆய்வுக் குழு பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கிராணைட் முறைகேடு தொடர்பான வழக்குகளில் சாட்சியம் அளிப்பதற்காக செல்லும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு, குறைந்தது ஒரு துப்பாக்கி ஏந்திய காவலருடன் கூடிய போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டார்.
மேலும், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து போலீஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க மறு ஆய்வு குழுவுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.