ஆகம விதிகள்படி காஞ்சிபுரம் வரதர் கோயிலில் குடமுழுக்கு பணிகள் நடைபெறுகிறதா? - ஐகோர்ட்

ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவு
ஆகம விதிகள்படி காஞ்சிபுரம் வரதர் கோயிலில் குடமுழுக்கு பணிகள் நடைபெறுகிறதா? - ஐகோர்ட்
Updated on
2 min read

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் குடமுழுக்குக்கான சீரமைப்பு பணிகள் ஆகம விதிகளின்படி நடைபெறுகிறதா என்பதை ஒரு துணைக் குழு அமைத்து ஆய்வு செய்ய மாநில அளவிலான நிபுணர் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு என்ற பெயரில் ஆகம விதிகளை மீறி கட்டுமான மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பெறப்பட்ட ஒப்புதல்களை சமர்ப்பிக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிடக் கோரி. அந்தக் கோயிலை கட்டிய மன்னரின் வாரிசு என்ற அடிப்படையில் கர்நாடகாவைச் சேர்ந்த கிருஷ்ண தேவராயா என் பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.கே.ஸ்ரீனிவாசன், "குடமுழுக்கு என்ற பெயரில் தொல்லியல் முக்கியத் துவம் வாய்ந்த இந்த கோயிலில் புராதன ஆணையத்தின் அனு மதியின்றியும், மாநில அளவிலான நிபுணர் குழுவின் ஒப்புதல் பெறாமலும் அறநிலையத் துறை கட்டுமானப் பணிகளை மேற் கொண்டு வருகிறது.

குறிப்பாக கருவறைக்கு செல்ல மரத்தால் ஆன 6 படிகள் ஏற்கெனவே இருந்த நிலையில், தற்போது ஆகம விதிகளுக்கு புறம்பாக 10 படிகளாக மாற்றப்பட்டுள்ளது. கோயிலின் மேற்கூரையில் தங்க பல்லி இருந்த நிலையில் மேற்கூரை உயரத்தை குறைத்து ஃபால்ஸ் சீலிங் அமைக்கப்பட்டு, அதன் கீழ் தங்க பல்லி பொருத்தப்பட்டுள்ளது. இதுபோல பல்வேறு பணிகள் ஆகம விதிகளுக்கு முரணாக நடைபெற்று வருகிறது" என குற்றம் சாட்டினார்.

பதிலுக்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன் ஆகியோர், "பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் குடமுழுக்கு பணிகளை மேற்கொள்ளும் முன்பாக தொல்லியல் துறைத் தலைவர், மாநில அளவிலான நிபுணர் குழுவினர், ஆகம நிபுணர்கள் உள்ளிட்டோருடன் பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்திய பிறகே இப்பணிகள் நடந்து வருகின்றன.

3 மாதங்களாக பணிகள் முடக்கம்: கோயில் படிகளின் உயரம் ஒன்றரை அடியாக இருப்பதால் அதில் ஏற சிரமப்படும் பக்தர்களின் வசதிக்காக சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது. படிகளில் ஏறிச்சென்று தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களையும் தடுக்கவில்லை. தங்கப் பல்லியின் உயரம் குறைக்கப்பட்டிருப்பது ஆகம விதிகளுக்கு எதிரானது அல்ல.

கோயிலின் தொன்மை மாறாமல் சுவரோவியங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே 90 சதவீத பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில், கடந்த 3 மாதங்களாக எந்தப் பணியும் மேற்கொள்ளப்படா மல் முடங்கிக் கிடக்கிறது" எனக்கூறி அறிக்கையை சமர்ப்பித்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "கோயிலின் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் ஆகம விதிகளின்படி நடைபெறுகிறதா என்பதை மாநில அளவிலான நிபுணர் குழு ஒரு துணைக் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். அந்த குழுவில் ஆகமம் மற்றும் தொல்லியல் துறை நிபுணர்கள் இடம் பெற வேண்டும். ஆய்வு செய்யும் தேதியை முன்னதாக நிர்ணயித்து கோயிலில் அறிவிப்பு செய்ய வேண்டும். இந்த குழு அனைத்து தரப்பு ஆட்சேபங்களையும் ஆய்வு செய்து, எந்தெந்த பணிகளை தொடரலாம்.

எவற்றை தொடரக் கூடாது, எதை மாற்றி அமைக்கலாம் என மாநில அளவிலான குழுவுக்கு பரிந்துரைக்க வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில், எந்தெந்த பணிகளை தடையின்றி தொடரலாம் என்பது குறித்து மாநில நிபுணர் குழு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறி வழக்கை முடித்து வைத்துள்ளார்.

ஆகம விதிகள்படி காஞ்சிபுரம் வரதர் கோயிலில் குடமுழுக்கு பணிகள் நடைபெறுகிறதா? - ஐகோர்ட்
கூட்டணி வாய்ப்புகளை கோட்டை விட்ட தவெக: ஆதவ் மீது ஆதங்கத்தைக் கொட்டிய விஜய்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in