

சென்னை மாநகராட்சி |கோப்புப் படம்
சென்னை: மாநகராட்சி சார்பில் இதுவரை 1,50,303 தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வெறிநாய்க்கடி நோய் பாதிப்பிலிருந்து பொதுமக்களை காத்திடவும், வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை மாநகரை உருவாக்கிடவும் அனைத்து தெரு நாய்களுக்கும் வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி, அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் தீவிர முகாம்கள் கடந்த ஆக.11 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது.
இந்த சிறப்பு முகாமின் மூலம் திருவொற்றியூர் மண்டலத்தில் 12,313 தெருநாய்களுக்கும், மணலி மண்டலத்தில் 7,200, மாதவரம் மண்டலத்தில் 15,038, தண்டையார்பேட்டை மண்டலத்தில் 12,477, ராயபுரம் மண்டலத்தில் 8,598, திரு.வி.க நகர் மண்டலத்தில் 13,849, அம்பத்தூர் மண்டலத்தில் 21,844, அண்ணாநகர் மண்டலத்தில் 11,895, தேனாம்பேட்டை மண்டலத்தில் 7,782, கோடம்பாக்கம் மண்டலத்தில் 10,131, ஆலந்தூர் மண்டலத்தில் 4,343, பெருங்குடி மண்டலத்தில் 12,752 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது, வளசரவாக்கம், அடையாறு மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் இம்முகாம் நடைபெற்று வருகிறது. வளசரவாக்கம் மண்டலத்தில் இதுவரை 3943 தெருநாய்களுக்கும், அடையாறு மண்டலத்தில் 3,985 தெருநாய்களுக்கும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 4,153 தெருநாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆக.11-ம் தேதி முதல் அக்.21-ம் தேதி வரை நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் 1,50,303 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
'வெறிநாய்க்கடிநோய் இல்லா சென்னை' (Rabies Free Chennai) என்ற இலக்கை அடைவதற்கு பொது மக்களும், செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களும் மற்றும் விலங்கு நல ஆர்வலர்களும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.