போலீஸார் சிறப்பாகப் பணியாற்றும்போது மக்களால் வழங்கப்படும் பாராட்டுகளே பெரிய பதக்கம்: சென்னை ஆணையர் கருத்து

போலீஸார் சிறப்பாகப் பணியாற்றும்போது மக்களால் வழங்கப்படும் பாராட்டுகளே பெரிய பதக்கம்: சென்னை ஆணையர் கருத்து
Updated on
1 min read

சென்னை: 'போலீஸார் சிறப்பாகப் பணியாற்றும்போது, பொதுமக்களால் வழங்கப்படும் பாராட்டுகளே பெரிய பதக்கம்' என சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்தார்.

தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகள் எந்தவித தண்டனைகளும் இன்றி சிறப்பாகப் பணிபுரிந்த காவல் ஆளிநர்களுக்கு ஆண்டுதோறும் முதலமைச்சர் காவலர் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகர காவல் சட்டம் - ஒழுங்கு பிரிவில் 157 பேர், போக்குவரத்து காவல் நிலையங்களைச் சேர்ந்த 94 பேர், ஆயுதப்படை மற்றும் மோட்டார் வாகனப் பிரிவுகளை சேர்ந்த காவலர்கள், நுண்ணறிவுப் பிரிவு, மத்திய குற்றப் பிரிவு, நவீன காவல் கட்டுப் பாட்டறை, சென்னை பாதுகாப்பு காவல் பிரிவு, உயர்நீதிமன்ற பாதுகாப்பபு காவல் பிரிவு, குற்ற ஆவணக் காப்பகம், விபச்சார தடுப்புப்பிரிவு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் 49 பேர் என சென்னை மாநகர காவல்துறையில் பணிபுரியும் 300 போலீஸார் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், முதல்வர் காவல் பதக்கங்களை அவர்களுக்கு வழங்கி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: காவல் துறையில் பதக்கங்கள் பெறுவது மிகவும் பெருமையான விஷயம். சில பிரச்சினைகளில் சிறப்பான செயல்பாடு, சில பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது கண்ணியமாக அமைதி காப்பது என்பதும் பெருமை தரக்கூடியது. அத்தகைய பெருமை தரக்கூடிய காரியங்களைச் செய்து பதக்கங்களைப் பெற்று நெஞ்சம் நிமிர்ந்து நிற்கும் காவல்துறையினருக்கு என் பாராட்டுகள்.

பொதுமக்களின் குறைகள்: காவல் பணி என்பது அரசு பணி என்பதை விட பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்புள்ள பணி. பொது மக்களின் குறைகளை அதிகாரிகள், காவலர்கள் பரிவுடன் கேட்டு, தங்களால் முடிந்த வரை சட்டத்துக்கு உட்பட்டு, அவர்களுக்குச் செய்து கொடுக்க வேண்டும். அப்போது பொது மக்களால் வழங்கப்படும் பாராட்டுகளே பெரிய பதக்கங்கள் ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மாநகர காவல் கூடுதல் ஆணையர்கள் ஜோஷி நிர்மல் குமார் (தலைமையிடம்), கார்த்திகேயன் (போக்குவரத்து), பிரவேஷ் குமார் (வடக்கு), நரேந்திரன் நாயர் (தெற்கு), ராதிகா (மத்திய குற்றப் பிரிவு) மற்றும் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், ஆயுதப்படை துணை ஆணையர்கள், காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

போலீஸார் சிறப்பாகப் பணியாற்றும்போது மக்களால் வழங்கப்படும் பாராட்டுகளே பெரிய பதக்கம்: சென்னை ஆணையர் கருத்து
காங்கிரஸ் அலுவலகத்தில் குட்கா பதுக்கிய நிர்வாகி கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in