

சென்னை: சிங்கப்பெண் அதிரடிப்படை வாகனங்களை சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பெண்கள், குழந்தைகளின் அவசர உதவிக்கு நேரில் சென்று உதவ வேண்டும் என அப்பிரிவு போலீஸாருக்கு அறிவுறுத்தினார்.
பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், தமிழக முதல்வர் விஜய் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னை எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானத்தில் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' என்ற புதிய காவல் பிரிவை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மேற்பார்வையில், சென்னை காவல்துறையின் 4 மண்டலங்களிலும் தலா ஒரு உதவி ஆணையர் ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு, இப்பிரிவு செயல்பட்டு வருகிறது.
இந்த அதிரடிப்படையினர் தங்களது மண்டலங்களில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களின் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் இன்று காலை எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீஸார் பயன்படுத்தி வரும் வாகனங்களை நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, “பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவசர உதவி தேவைப்படும் நேரங்களில் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று உதவ வேண்டும். அவர்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது விரைந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
மேலும், “பெண்கள் எவ்வித அச்சமுமின்றி பொது இடங்களுக்குச் சென்று வருவதற்கு ஏதுவாக தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றும் சிங்கப்பெண் படையினருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, அதிரடிப்படை பிரிவில் பணியாற்றும் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸாரிடம் அவர்களின் பணி சார்ந்த குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, தலைமையிட இணை ஆணையர் உமா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் துணை ஆணையர் ஹரிகுமார் மற்றும் 4 மண்டலங்களின் ஒருங்கிணைப்பு அதிகாரிகளான உதவி ஆணையர்கள் ரமேஷ் பாபு, ராஜ சேகர், மணிமேகலை, ஆல்ட்ரின் ஆகியோர் உடனிருந்தனர்.