

தாம்பரம் - கடற்கரை இடையே சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பாதி வழியில் இறங்கி நடந்து செல்லும் சூழல் ஏற்பட்டது. | இடம்: சேத்துப்பட்டு. |
சென்னை: குறைக்கப்பட்ட சேவைகள், புதிய இயக்க முறை காரணமாக கடற்கரை- தாம்பரம் வழித்தடத்தில் ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
சென்னை - தாம்பரம் மின்சார ரயில் வழித்தடத்தில் எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஏப்.5-ம் தேதி வரை புறநகர் ரயில் சேவைகள் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கமாக தினமும் 204 முறை எழும்பூர் வழியாக மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதாவது, ஒவ்வொரு 10-12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக எழும்பூரில் வழக்கமாக புறநகர் ரயில்கள் நின்று செல்லும் 10 மற்றும் 11-வது நடைமேடைக்கு பதிலாக, 5 மற்றும் 6-வது நடைமேடைகளில் ரயில்கள் நின்று செல்லும் என்றும், 204 முறை ரயில்கள் இயக்கப்படுவதற்கு பதில், 164 முறை மட்டுமே இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
ரயில் சேவைகள் குறைக்கப்பட்டதால் நேற்று காலை முதல் பயணிகள் பாதிப்புக்குள்ளாகினர். இதற்கிடையே சிக்னல் பிரச்சினை காரணமாக நேற்று அதிகாலையில் இருந்தே, கடற்கரை முதல் தாம்பரம்வரை இயக்கப்பட்ட புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் எதிரெதிராகவும், ஒன்றன்பின் ஒன்றாகவும் என பல்வேறு குளறுபடிகளும் ஏற்பட்டன. இதன் காரணமாகபள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்வோர் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
ரயில் சேவை பாதிப்பால் வேலைக்கு சென்று திரும்புபவர்கள் நேற்று அவதிக்குள்ளாயினர். தாம்பரம் பேருந்து நிறுத்தத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. | படம்:எம்.முத்துகணேஷ் |
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: 5 முதல் 15 நிமிட தாமதம் எழும்பூர் ரயில் நிலைய பராமரிப்பு பணி காரணமாக புறநகர் ரயில்கள் நின்று செல்லும் நடைமேடைகள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் ரயில்கள் எழும்பூர் அடுத்த சேத்துப்பட்டுக்கு செல்லும்போது தண்டவாளங்களைக் கடக்க வேண்டும்.
வழக்கமான 10 மற்றும் 11-வது நடைமேடையில் செல்லும்போது இந்த பிரச்சினை ஏற்படாது, தற்போது விரைவு ரயில்கள் செல்லும் 5 மற்றும் 6-வது நடைமேடையில் இருந்து புறநகர் செல்லும் ரயில் தண்டவாளங்களுக்கு மாறுவதற்கு கூடுதல் நேரம் எடுக்கும்.
அதன்படி, சேத்துப்பட்டில் இருந்து எழும்பூருக்கும், எழும்பூரில் இருந்து சேத்துப்பட்டுக்கும் வழக்கமாக 2 அல்லது 3 நிமிடங்களில் செல்ல வேண்டிய ரயில் 5 முதல் 15 நிமிடங்கள் வரை தாமதமாகிறது. இதனால் ரயில்கள் சேத்துப்பட்டு மற்றும் பூங்கா ரயில் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
இதன் காரணமாக ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த ரயில்கள் சேவை குறைப்பு குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் ராயபுரம் - கிளாம்பாக்கம், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும் நேற்று காலை பெரும்பாலானோர் வழக்கம்போல் ரயில்களில் பயணித்தனர்.
சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் ஒரு ரயில் நின்றிருந்த போது, அதன் பின்னாலேயே மற்றொரு ரயில், ரயில் நிலையத்துக்கு வெளியே காத்திருந்தது, இதேபோன்று, பல ரயில் நிலையங்களில் ரயில்கள் அணிவகுத்து நின்றன.
இதனால் பயணிகள் ஆங்காங்கே நின்ற ரயில்களில் இருந்து கீழே குதித்து ஆபத்தான முறையில்தண்டவாளங்களில் நடந்து சென்று ரயில் நிலையங்களை அடைந்து பின்னர் மாற்று போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தினர்.
எனவே, ரயில் நிலையங்களில் இதுபோன்ற பெரிய அளவிலான மாற்றங்களை செய்யும்போது முறையாக திட்டமிட்டு பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ரயில்வேநிர்வாகம் மேற்கொண்டிருக்க வேண்டும் என பயணிகள் குற்றம்சாட்டினர்.