

நந்திவரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே.டி. கார்த்திக் தண்டபாணி நேற்று ஆப்பூர், வெங்கடாபுரம், கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, அவர் பேசுகையில், ‘‘திமுக தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசிகள் மின்சாதன பொருட்கள் வாங்க ரூ.8 ஆயிரத்திற்கான சிறப்பு கூப்பன் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது பெண்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டம். மகளிர் உரிமைத் தொகையை ஆயிரத்திலிருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் வாக்குறுதி கொடுத்துள்ளார்.
அரசு நலத்திட்டங்கள் நேரடியாக மக்களைச் சென்றடைந்துள்ளது. திமுக ஆட்சியில் அரசின் திட்டங்கள் பெறாத வீடுகளே இல்லை. முதல்வர் செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அதனால், ஓட்டு கேட்க செல்லும் இடங்களில் அதிகளவில் பெண்கள் வரவேற்பு கொடுக்கின்றனர். மீண்டும் அமையும் திமுக ஆட்சியில் செங்கல்பட்டு தொகுதிக்கு சிறப்பு கவனம் எடுத்து திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, முன்மாதிரி தொகுதியாக மாற்றப்படும்’’ என்றார்.