

மதுராந்தகம் பள்ளியில் ஆய்வு செய்த ஆட்சியர் வீரப்பன்.
செங்கல்பட்டு: மதுராந்தகம் நகராட்சி மற்றும் செய்யூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிகள், அரசுத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக ஆட்சியர் மு.வீரப்பன் ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவை சுவைத்து, அதன் தரம், காய் கறிகள் சேர்க்கப்பட்டுள்ளனவா என்பதை ஆட்சியர் மு.வீரப்பன் ஆய்வு செய்ததுடன், மாணவர்களிடமும் கருத்துகளை கேட்டறிந்தார். பள்ளி வளாகம் மற்றும் கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, செய்யூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் உணவுப் பொருட்களின் இருப்பு, எடை மற்றும் பராமரிப்பு முறைகளை ஆய்வு செய்தார். தண்ணீர் பந்தல் பகுதியில் அமையவுள்ள சிப்காட் திட்டப் பகுதி மற்றும் ஓதியூர் பறவைகள் சரணாலயம் அமையுள்ள பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இடைக்கழிநாடு அரசு உயர் நிலைப் பள்ளி, கடப்பாக்கம் மகளிர் மேல்நிலைப் பள்ளி, நயினார் குப்பத்தில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மேல் நீர்த் தேக்கத் தொட்டி, கொடூர் சிட்கோ தொழிற்பேட்டை மற்றும் பழங்குடியினருக்கான வீடுகள் கட்டுமானப் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்த ஆட்சியர், தரத்தை உறுதி செய்து பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.