

தாராபுரம்: தாராபுரம் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் சத்யபாமாவுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர் பிரச்சாரத்தை பாதியில் முடித்து திரும்பினார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் அக்.6-ம் தேதி நடக்கிறது. தவெக, திமுக, அதிமுக, நாதக, இந்திய கம்யூனிஸ்ட் உள்பட மொத்தம் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட குண்டடம் ஒன்றியம் மேட்டுக்கடை, ஓடைக்கல்பாளையம்,நந்தவனம்பாளையம், முத்துக்கவுண்டம்பாளையம், வெருவேடம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் தவெக வேட்பாளர் சத்யபாமா கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
வெருவேடம்பாளையத்தில் திறந்த வேனில் நின்றபடி அவர் பேசியபோது, கூட்டத்திலிருந்த நபர் ஒருவர், “அதிமுக சார்பில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்த நீங்கள், எதற்காக ராஜினாமா செய்துவிட்டு தற்போது தவெகவில் போட்டியிடுகிறீர்கள்?” என கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு பதிலளித்த சத்யபாமா, “அதிமுக, திமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்க ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதால் வெளியேறினேன்” என்றார்.
இதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் திரண்டிருந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், “பிஏபி பாசனப் பகுதியே கடுமையான வறட்சியில் தவிக்கும்போது, உப்பாறு அணைக்கு தண்ணீர் கொண்டு செல்வதாகக் கூறி எங்களுக்குத் துரோகம் செய்கிறீர்களா” என்றும் “பிஏபி வாய்க்காலைத் தூர்வார சட்டப்பேரவையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்து, இதுவரை ஏன் அந்தப்பணிகள் தொடங்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பம் நிலவியது. போலீஸார் அங்கிருந்தவர்களை சமாதானம் செய்தனர். நிலைமையைச் சமாளிக்க முடியாததால், தனது பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டு வேட்பாளர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.