

சென்னை: மதுபானக் கொள்முதலில் அனைத்து மது உற்பத்தியாளர்களிடமிருந்தும் சம அளவில் கொள்முதல் செய்யப்படும் என, டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு வகை மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த மதுபானங்களை டாஸ்மாக் நிர்வாகம் மதுபான உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்து சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மனமகிழ் மன்றங்கள் போன்ற உரிமம் பெற்றவர்களுக்கு வழங்கி வருகிறது.
குறிப்பாக, சில குறிப்பிட்ட உற்பத்தியாளர்களிடம் இருந்து மட்டுமே அதிகளவில் மதுபானம் கொள்முதல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்தன. இந்நிலையில், தற்போது அனைத்து உற்பத்தியாளர்களிடம் இருந்தும் சமஅளவில் மதுபானம் கொள்முதல் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: டாஸ்மாக் நிர்வாகம் தற்போது 17 உற்பத்தியாளர்களிடம் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்கிறது.
இந்நிலையில், ஒவ்வொரு பிராண்டின் 3 மாத சராசரி விற்பனையையும், முந்தைய வார விற்பனையையும் ஒப்பிட்டு கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்த நடைமுறை ஒரு தலைப்பட்சமாக இருப்பதாக உற்பத்தியாளர்கள் கூறினர். இதையடுத்து, தற்போது அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கும் வகையிலும், வாடிக்கையாளர்கள் கூடுதலாக அவர்கள் விரும்பியதை தேர்வு செய்யும் வகையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் சமமான அளவில் கொள்முதல் ஆணைகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதனிடையே, “அனைத்து மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்தும் சமமாக கொள்முதல் செய்தால், வாடிக்கையாளர் விரும்பும் குறிப்பிட்ட மதுவகை கிடைக்காத நிலை ஏற்படும்.
ஏனெனில், ஒரு சில மதுபான வகையை வாடிக்கையாளர் அதிக அளவில் விரும்பும் நிலையில் அதை அதிகளவில் கொள்முதல் செய்யாமல், அனைத்தையும் சமமான அளவில் கொள்முதல் செய்வது என்பது மறைமுகமாக குறிப்பிட்ட நிறுவனத்தின் மதுவகை அதிக அளவில் கொள்முதல் செய்ய வழிவகுக்கும் செயலாகவே முடியும்” என தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.